விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
முதலில் காமிக்ஸ் கதைகளை புத்தகமாக வெளியிட்டது அமெரிக்கா என்றாலும், இப்போது காமிக்ஸ் வாசிப்பில் கொடி கட்டிப் பறப்பது ஜப்பான்!
உலகம் முழுக்கவே இருபதாம் நூற்றாண்டில் காமிக்ஸ் உச்சகட்டத்தை அடைந்தது. நகைச்சுவையிலிருந்து விரிவடைந்து, ஆக்சன், அறிவியல் புனைகதை, மர்மம், சூப்பர் ஹீரோ, சுய வரலாறு என்றெல்லாம் தன் எல்லைகளை நீட்டிக் கொண்டது. பள்ளிப் பாடங்கள்கூட காமிக்ஸாகத் தயாரிக்கப்படுகின்றனவாம்!
இவ்வளவு பெருமை மிக்க காமிக்ஸ், தமிழைப் பொறுத்தவரை முயற்சிக்கப் படாமலேயே இருந்தது. சிவகாசி பதிப்பகங்கள் அமெரிக்க காமிக்ஸ்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டன. இரும்புக்கை மாயாவி, வேதாளம், ரிப் கெர்பி, டார்ஜான் என்று காமிக்ஸ் புத்தகங்கள் விரித்த மாய உலகம் பிரமிப்பூட்டுவன. ஆனாலும், அவை நேரடியாக தமிழிலேயே உருவாக்கப்பட்டவை அல்ல என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழில் நேரடி காமிக்ஸ் இல்லையே... என்கிற குறையைத் தீர்த்துவைக்கும் விதமாக, அந்த முயற்சியை சுட்டி விகடன் தொடங்கியது. இலவச இணைப்பாக காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. அதிரடியாக வெளிவந்த அந்த வண்ணமயமான காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன.
அவற்றின் மற்றொரு பரிணாமமான இந்த காமிக்ஸ், மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்கு சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பும் மர்மங்களும் நிறைந்த ரமேஷ் வைத்யாவின் கற்பனைக் கதைக்கு, ஓவியர் முத்து வரைந்த திகிலூட்டும் படங்கள் உங்களை மாய உலகுக்குக் கொண்டு செல்லும்.