சுவீடன் நாட்டு அறிஞர் ஆல்பிரட் நோபல் பெயரில், அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டு வரும் உலகின் மிக உயரிய விருது நோபல் பரிசு. இது எவருக்கும் எளிதாகக் கிடைத்துவிடாது. சாதனையாளர்களின் பணிகளை வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆய்வுகள் தொடர்பான கேள்விக் கணைகளைத் தொடுத்து, அவர்களின் ஆய்வுகளிலும் பதிலிலும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே விருதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை, இந்த நூல் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.
தங்களுடைய ஆராய்ச்சிக்கு இது போன்ற உயர்ந்த பரிசுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. நினைவிலும் நிஜத்திலும் மனித குல மேம்பாட்டைப் பற்றியே யோசித்து, அல்லும் பகலும் விடாது உழைத்ததற்கான அங்கீகாரமே இந்த நோபல் விருது. பல ஆண்டுகளாக இந்தப் பரிசு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், உலகப் போர்க் காலங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் 1916, 1931, 1934, 1940, 1941, 1942 ஆகிய வருடங்களில் இயற்பியலுக்கான நோபல் பரிசு எவருக்கும் அளிக்கப்படவில்லை.
நோபல் பரிசு பல துறைகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் இயற்பியல் துறையில் வழங்கப்பட்ட விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் இந்நூல் விவரிக்கிறது. தவிர, சிலவற்றில் தோல்வியை சந்தித்தாலும் மேலும் ஆராய்ச்சியைத் தொடர எது ஊக்கியாக இருந்தது; எந்த மாதிரியான சூழலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்பதையும் அலசியிருக்கிறார் இந்நூலாசிரியர்.
வருங்காலத் தூண்களான மாணவர்களையும், அறிவியல் ஆர்வம் உள்ளவர்களையும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க இந்நூல் துணைபுரியும்