முத்தமிழ்மன்றம், சிவகாசி
நுனிப்புல் என்னும் இந்தக் குடும்ப, சமூக, அறிவியல், ஆன்மீக புதினம், முத்தமிழ்மன்றம் என்னும் இணையத் தமிழ்க் கடலில் முத்துக் குளிக்கும் போது கிடைத்த மாசற்ற நல் முத்து இந்த நுனிப்புல். மூத்த தமிழ்த் தாய்க்கு ஒரு இளைஞன் சூட்டும் அணியாய், காவியமாய் இது விளங்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஏதேனும் ஒரு இடத்தில் பிரதிபலிப்பது ஆச்சரியம். அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் நாமே முகம் கொடுத்து உயிர் கொடுத்து மனதிற்குள் நாடகமாய் ஓட்டிப் பார்க்கும் அளவுக்கு எதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்ற கதை.
இந்தக் கதாநாயகன் வாசனைப் பற்றிச் சிலவரிகள். ஏட்டுக் கல்வியை விடவும் அனுபவப் பாடமே சிறப்பு என்னும் கொள்கை உடையவனோ என்று நினைப்பதற்குள் பக்கத்து வீட்டுக் குழந்தையையும் பாரறியப் படிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வான்! பெயரைப் போலவே மனதுக்குள் மலராய் வாசனை புரிபவனாகவும், மனதில் எப்போதும் வாசம் கொள்பவனாகவும் விளங்குகின்றான். எனக்கென்னவோ வாசன் வேறு வெங்கட ரங்கன் என்னும் ராதா கிருட்டிணன் வேறு என்று தோன்றவில்லை. கதையில் பெண்கள் குழாம் அதிகம் தான். மாதவி, பாரதி, பூங்கோதை என்று பலர். காதல் மெல்லியதாய் நூல் முழுதும் இழையோடுவது இதன் மற்றொரு சிறப்பு. வாசிக்கும் அனைவரையும் சுகானுபவம் பெற வைத்திருக்கின்றார் ஆசிரியர்.
இடையிடையே அவர் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதிய கவிதைகளை ஆங்காங்கே இணைத்த போது கவிதைக்கும் கதைக்கும் உயிர் வந்தது என்னவோ நிஜம். கதைக்காகக் கவிதையா, கவிதைக்காகக் கதையா என்று வியக்க வைத்தது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் கற்றுத் தரும் ஆசானாக, இரண்டையும் இணைக்கும் பாலமாக, இரண்டும் ஒன்றே என்றுணர்த்தும் கலங்கரை விளக்கமாக இந்தக் கதையைப் படித்து முடிக்கும் அனைவருக்கும் தோன்றும். எளிய பேச்சு நடையில் இருந்து இலக்கண இலக்கிய அறிவியல் நடையையும் தொட்டு நவரசத்தையும் ததும்பி வழியச் செய்து அறுசுவை அரும் விருந்து படைத்திருக்கின்றார் ரெங்கன். மொத்தத்தில் நுனிப்புல்லின் வேர் வாசிக்கும் வாசகர் மனதில் ஆணிவேராய் ஊன்றி உலகெங்கும் மணம் பரப்பும்.
நுனிப்புல்லை நினைக்கும் தோறும் யார் நினைவுக்கும் வருவது, அதிகாலைப் பொழுது, புல் வெளி, பனித்துளி புல்லின் மேல் நிற்பதால் தலைக்கனம், இருந்தாலும் அதன் அடக்கம். சூரியனைக் கண்டு பனித்துளி மறைய, நுனிப்புல்லின் தலைக்கனம் குறைய நம் மனதைக் கொள்ளை கொள்ளும் இனிய இயற்கை எழில் அரவணைக்கின்றதல்லவா? இனி நுனிப்புல்லைப் பற்றி நினைத்தாலும் கேட்டாலும் உங்கள் நினைவுக்கு வருவது இந்தப் புதினமாகவே இருக்கும். இக்கதையைப் படிக்கும் அனைவரின் மனதிலும் சாந்தியும், சந்துஷ்டியும், அமைதியும், திருப்தியும் ஏற்படுத்தும்.