சென்டர் பார் ஏசியா ஸ்டடீஸ், சென்னை-18, மற்றும் காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் (பக்கம்:147)
இந்தியா-இலங்கை இடையே 1974, 76ல் கையெழுத்தான கடல் எல்லை ஒப்பந்தத்தால், கச்சத் தீவு இலங்கைக்கு கை மாறியதும், அதனால், பாக்., நீரிணைப்பு பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும் இந்த நூலில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பின், மீன்வளம் அதிகமுள்ள பகுதிகள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்றது தான், தற்போது தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைக்கு காரணம் என்பதையும் இந்த நூல் தெளிவாக பதிவு செய்துள்ளது. கச்சத் தீவு தொடர்பான சர்ச்சையின் பின்னணி என்ன? இந்த பிரச்னை தமிழகத்தில் உணர்ச்சிகரமாக பேசப்படுவதற்கு காரணம் என்ன? தமிழக மீனவர்களின் நலன்களை உறுதி செய்யவும், பாதுகாக்கவும் முடியுமா என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.ராமநாதபுரம் ராஜாவுக்கு கச்சத் தீவு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துச் சென்று விட்டதால், அவற்றைப் பார்வையிட முடியவில்லை என்ற தகவலும் இந்நூலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சத் தீவு தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூலில் தெளிவான பதில் உள்ளது. இது ஒரு ஆய்வு நூல் மட்டுமல்ல, கச்சத் தீவு தொடர்பான ஆவணம் என்று கூட கூறலாம்.