சென்னை பைன் ஆர்ட்ஸ், எண்.75/9 (33ஏ-9) "பாலமுரளி 1வது மெயின் ரோடு, காந்தி நகர், அடையார், சென்னை-20. போன்: 2442 2544. (பக்கம்: 178 ).
கர்நாடக இசை உலகிற்கு பொக்கிஷங்களாக பல பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டு வரும் சென்னை பைன் ஆர்ட்சின் புதிய படைப்பு "பாலை ஆழி என்னும் இப்புதிய நூல் முன் அட்டையில் படிப்போரை கவரும் வண்ணம் அழகு கொஞ்சும் பிள்ளையார் கையில், எழுத்தாணியுடன் அமர்களமாக ஆசீர்வதிக்க பின் அட்டையில் நூலாசிரியரின் வாழ்க்கை குறிப்பையும் கொடுத்துள்ளனர். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் உரை சிறப்பானது. இறுதியாக நூலாசிரியர் பி.எம்.சுந்தரம் "பாலை ஆழி என்ற தன் புத்தகத்தின் சாரத்தைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார். புத்தகத்தின் சாரம் - கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை ராகங்கள். ராகங்கள் உருவாகக் காரணமாக இருப்பவை ஆரோஹணமும், அவரோகணமும் தான். இவை இரண்டும் சேர்ந்து தான் ராகங்களை படைக்கின்றன. அப்படி பிறந்த ராகங்கள் கணக்கற்றவை. பல பழைய சங்கீத திரட்டுகளையும், சுவடிகள், பேழைக் குறிப்புகளில் உள்ள ராகங்களை ஒன்று திரட்டி ஒரு குடையின் கீழ் புத்தகமாக ஆங்கில அகர வரிசையில் மொத்தம் 3,944 ராகங்களுக்கு ஆரோகண அவரோகணத்தையும் அவை எந்த நூலில் இருந்து பிறந்துள்ளன என்பதையும் எளிதில் புரியும்படி கொடுத்துள்ளார். இந்நூல் இசைக் கற்போர் இளைய தலைமுறை முதல் முன்னணி குரலிசையாளர், கருவி இசையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், பல பழைய ராகங்களுக்கு ஆரோகண அவரோகணம் தெரியாததால் பல பழைய பாடல்களை எப்படிப் பாடுவது, இசைப்படுத்துவது என்பது ஒரு புரியாத புதிராக உள்ள நிலையில் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி.