நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, 2வது தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:288).
வைணவத்தின் தலையாய நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும். அதில், முதன் மையாக இருப்பது பெரியாழ்வாரின் பாசுரங்கள். காலத்தால் பிற் பட்டவராக இருந்தாலும், இவர் பாசுரங்கள், பொங்கும் பரிவாலே பெருமான் குறித்து அமைந்துள்ளதால், இவரும் பெரியாழ்வார் ஆனார்; இவர் பாசுரங்களும் முதன்மை பெற்றன. இவரது 473 பாசுரங்களுக்கும் இனிய தமிழில், எளிய உரையுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. உரையாசிரியரின் முன்னுரையே பெரியாழ்வார் குறித்த நிறைவான செய்திகளைக் கூறுகிறது. முன்னோர்களின் உரைகளை இவ்வுரையாசிரியர் படித்திருந்து போதிலும், சில இடங்களில் தம் புலமைக்கு ஏற்ப புதிதாக எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக, "பந்தனை தீர என்ற சொல்லிற்கும் (பக்.34), "சொட்டுச் சொட்டெனத் துளிக்கத் துளிக்க என்ற பாசுர அடிக்கும் (பக்.92), இவர் கூறும் உரையைக் குறிப்பிடலாம். ஆனால், முன்னோர்கள் கண்ட உரை நயத்தின் உயர்வை, இவர் உரையில் காண இயலவில்லை. பெரியாழ்வார் திருமொழியை நன்குணர இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.