விலைரூ.300
புத்தகங்கள்
வளமார் கொங்கு வரலாறும் பண்பாடும்
விலைரூ.300
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: சக்தி குழும நிறுவனங்கள்
பகுதி: இலக்கியம்
Rating
சக்தி குழும நிறுவனங்கள், 180, ரேஸ்கோர்ஸ் சாலை, கோவை - 641018. போன்: 042-5923 4868 (பக்கம்: 370+வண்ணப்படத்தொகுப்பு.)
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டித் தொகுக்கப்பட்ட சிறப்புமலர் இந்நூல். "எக்கலையும் உறைநாடு என்று, இசைப்புலவர் திருக்கூட்டம் ஏத்தும் நாடு, குக்குடத்தான் கோவிலொடு குழைக்காதன், கோவில் கொளும் கொங்கு நாடு என்று திரு.வி.க.,வால் போற்றப்பட்ட கொங்கு நாடு, தற்கால அமைப்பின்படி சேலம், கோவை மாவட்டங்களோடு, திருச்சியில் கரூர் வட்டமும், மதுரை வடக்கில் பழனி, தாராபுரம், பல்லடம் வட்டங்களும் அடங்கும். "செம்மொழித் தகுதி எனத் தொடங்கும் வா.செ.குழந்தைசாமியின் கட்டுரையில் தொடங்கி, "கொங்கச் செல்வி ஈறாக முடியும் 56 கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பின், செம்மொழி, வரலாறு, கொங்கு இலக்கியங்கள், கொங்கில் சமயங்கள், கலைகளும் பண்பாடும், கல்வி, தொழில், பொருளாதாரம், கொங்கு நாட்டுச் சிறுகதைகள் எனப் பகுக்கப்பட்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சங்ககாலக் கொங்கு (முனைவர் செ.இராசு) கொங்கு நாணயங்கள் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி) விடுதலை வேள்விக்கு விறகு சுமந்தவர்கள் (பெ.சிதம்பரநாதன்) கொங்கு நாட்டு இலக்கியங்கள் (சிற்பி பாலசுப்ரமணியம்) தமிழ் ஏடு சுமந்த அரண்மனைத் தாழ்வாரம் (கி.வா.ஜகந்நாதன்) கொங்கு வேளரின் பெருங்கதை (தமிழ்த்தாத்தா உ.வே.சா.,) கொங்கு நாட்டுப்புறம் முனைவர் சு.சண்முக சுந்தரம்) கொங்கு நாட்டுப் பழமொழிகள் (அமுதன்) காளிங்கராயன் கொடை (பெ.தூரன்) போன்ற படைப்புகள் கொங்கு
நாட்டின் தொன்மை, இலக்கியச் செழுமை, கலை, கல்வி, வளர்ச்சி, சான்றோர் பெருமை ஆகியவற்றை எடுத்தியம்புகின்றன.
"வாழ்கிறார் கோவையிலே நல்ல மக்கள், சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில் தான்! எனும் கண்ணதாசன் பா.அடிகள் கொங்கின் மாண்பைச் சுட்டும். கொங்கு நாட்டின் பவானி கூடுதுறை, அயிரைமலை, பழனி மலை, பேரூர்க் கோவில் சிற்பங்கள், ஓலைச் சுவடி, செப்பேடு, வாழ்ந்த தந்தை பெரியார், ம.ப.பெரியசாமித் தூரன், புலவர் குழந்தை ஆகியோரின் படங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்நூல் கொங்கு நாடு பற்றிய கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். இத்தகைய அரிய முயற்சியில் சிறப்பானதொரு நூலைத் தொகுத்துள்ள சக்தி குழுமத்தின் தலைவர் அருட்செல்வர் நா.மகாலிங்கமின் அரும்பணி பாராட்டத்தக்கது.
மேலும் இந்நூலை சக்தி பைனான்ஸ் நிறுவனத்திலும், மற்ற ஊர்களில் உள்ள ஏ.பி.டி., அலுவலகத்திலும் பணம் செலுத்தி பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!