விலைரூ.180
புத்தகங்கள்
தமிழக மாவட்டங்களின் வரலாறு ஈரோடு மாவட்டம்
விலைரூ.180
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பல்லவி பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போலப் பழந்தமிழ் நாட்டுப் பிரிவுகளுள் ஒன்று கொங்கு நாடு. கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து அமைக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் 1979ல் இருந்து நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து லட்சம் மக்கள் தொகையுடைய 8,179 கி.மீ., பரப்பளவு உடையது இம்மாவட்டம். மாவட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முதல் அத்தியாயம் ஆக, சுற்றுலாத்தலங்கள் மற்றும் பின்னிணைப்புகள் உடன் நாற்பது தலைப்புகளில் விரிவான வரலாறு, இயற்கையமைப்பு, தொழில், மக்கள் வாழ்க்கை நிலை அனைத்தும் தரப்பட்டுள்ளன. இலக்கியப்புகழும், வரலாற்றுப் பெருமையும் தொல்பொருள் சிறப்பும் மிகுந்த இம்மாவட்டம் கால்நடைப்பெருக்கமும் இயற்கை வளமும் வாய்ந்தது. இந்த மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், சத்திய மங்கலம், ஆகிய ஐந்து வட்டங்கள் அடங்கியுள்ளன. வருவாய்க் கோட்டங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், சட்ட சபைத் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்துச் செய்திகளும் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. புதிய கற்காலத்தின் தொடக்கத்திலிருந்து, ஈரோடு மாவட்டப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. இந்த மாவட்டத்திலுள்ள கொடுமணல்(கொடுமணம்) அகழாய்வுகள் பல அரிய தகவல்களைத் தந்துள்ளன.
தமிழகத்தில் சென்னையை அடுத்து, ஏற்றுமதி வணிகத்தில் ஈரோடு இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. மஞ்சள் உற்பத்தியிலும், மஞ்சள் வணிகத்திலும் ஈரோடு முதன்மை பெற்றுள்ளது. ஜவுளித் தொழிலுக்கு ஆன மூலப்பொருள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்னலாடைத்தொழில், கைத்தறித்தொழில் சிறப்பு மிகுந்து விளங்குகிறது. இத்துடன் தோல் வர்த்தகமும் சிறப்பாக நடைபெறுகிறது. இப்படி அனைத்து வகையான வணிகமும் வளமும் மிக்க மாவட்டம் இது. ஈ.வெ.ரா., தீரன் சின்னமலை, கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், திருப்பூர் குமரன், பெரியசாமித்தூரன், புலவர் குழந்தை உள்ளிட்ட அரசியல், கலை, இலக்கிய மேதைகளின் பிறப்பிடம் இந்த மாவட்டம்.
அருமையான வண்ணத்தில் கெட்டி அட்டையமைப்பு, சிறப்பான அச்சமைப்பு, வண்ணப் படங்கள், அரிய தகவல்கள் அனைத்தும் கொண்ட இந்நூல், எல்லாரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒன்று.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!