கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712
தொடர்பு கொள்ளுதலிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவது எப்படி? ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் வழியில்உள்ள மலையடிவாரத்தில் தனது குடிசையின் முன் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு தத்துவ ஞானியைப் பற்றி ஈசாப் குட்டிக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. அந்த வழியே வந்த பயணி, அவரை நெருங்கி, வணக்கம் பெரியவரே. நான் ஏதென்ஸ் நகரை நோக்கிச் செல்கிறேன். அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று திருப்பிக் கேட்டார் தத்துவஞானி. நான் சார்டிஸ் நகரிலிருந்து நகரிலிருந்து வருகிறேன். உங்களிடம் சொல்வதில் தயக்கமில்லை. சார்டிஸ் மக்கள் நட்பு பாராட்டாதவர்கள், நம்ப முடியாதவர்கள், எந்த வகையிலும் உதவி செய்ய மாட்டார்ள். நான் அங்கிருந்து புறப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏதென்ஸ் நகரிலாவது நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதில் சொன்னார் அந்தப் பயணி. மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே, ஏதென்ஸ் நகர மக்களும், நீங்கள் பார்த்த சார்டிஸ் நகர மக்களைப்போலவே இருப்பதைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் தத்துவஞானி. ஏமாற்றத்துடன் பயணத்தைத் தொடர்ந்தார் அந்தப் பயணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மற்றொரு பயணி, பெரியவரே, நான் சார்டிஸ் நகரிலிருந்து ஏதென்ஸ் செல்கிறேன். சார்டிஸ் நகரில் எல்லோரும் நல்லவர்கள். நட்பாகப் பழகும் இனியவர்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்பவர்கள். ஏதென்ஸ் நகர மக்கள் இதில் பாதியளவு பண்புடன் இருந்தால் கூட மகிழ்ச்சியடைவேன் என்று தெரிவித்தார். மகிழ்ச்சி நண்பரே, ஏதென்ஸ் நகர மக்களும், சார்டிஸ் நகர மக்களைப் போல் அப்படியே இருப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்றார் தத்துவ ஞானி. மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றார் இரண்டாவது பயணி. மற்றவர்களிடம் நாம் எதைக் காண விரும்பகிறோமோ அதைக் காண்கிறோம் (இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி) என்பதையும்,சுய முழுமை பெறும் தீர்க்கதரிசனத்தையும், மேலே கூறப்பட்ட தத்துவ ஞானியின் கதை எளிமையாக விளக்குகிறது. மதிப்பீடுகள், நம்பிக்கைள், சிந்தனைகள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவைதாம் நம்மையும் நமது வாழ்வையும் வடிவமைக்கின்றன. இவற்றின் மூலமாகவே நாம் இந்த உலகைக் காண்கிறோம். நாம் கண்ணால் காணுகின்ற, காதால் கேட்கிற அனைத்துக்கும் இவைதான் வண்ணம் தீட்டுகின்றன. நமது கண்ணோட்டதையும், நமது முடிவுகளையும் இவைதான் நிர்ணயிக்கின்றன. நாம் மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளும்போது என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகள் இவைதாம். நமது செயல்பாடுகள், நமது வாழ்க்கைப் பாதை, நமது தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றுக்கு இவைதான் மவுன வழிகாட்டிகள்.