நூலாசிரியர் மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர். தன் தமையனாரை பற்றி எழுதிய நூல். அண்ணன் என்பதால் தருமர் என்று தலைப்பிட்டாரோ என்று எண்ணி புத்தகத்தை படித்தால், தவறு என்று தெரியும். ராணுவத்தில் சேர்ந்து, அதே சமயம் குடும்ப பாசத்தை முற்றிலும் கை கொண்டு வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை கொண்டவர்.
அவர் ராணுவ பணிக்கு பின், தபால் துறையில் பணியாற்றிய போது, அங்கு எல்லாருக்கும் அவர் தாராளமாக செய்த உதவிகள் அவருக்கு "தருமர் என்ற பெயரை தந்தது. 39 ஆண்டுகள் தபால் துறையில் பணியாற்றிய அவர் நான்காம் நிலை தொழிலாளர்களுக்கு கற்றுத் தந்து முன்னுக்கு கொண்டு வந்ததால், அவர் மீது பாசம் வைத்தவர்கள்
அதிகம்.
தன் சகோதரர் பேராசிரியர் பரமசிவன் பயங்கரவாதிகளால் வெட்டி கொல்லப்பட்ட போது, அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவரை ஒரு துறவியாகவே மாற்றி விட்டது. அப்படிப்பட்ட அண்ணனை படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர். குடும்பப் பெருமைகளும் இலக்கியமாக மாறும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம்.