நாளேடுகளில் அன்றாட நடப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவற்றுள், மக்களின் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புள்ள பிரச்னை ஏதாவது செய்தியாக இடம் பெற்றிருந்தால், அதுகுறித்து தலையங்கமாக ஒரு சிறு ஆய்வு செய்யப்படுவது, நாளேடுகள் மேற்கொள்ளும் ஒரு சம்பிரதாய செயல். சில சந்தர்ப்பங்களில் வெளிவரும் தலையங்கங்கள் அந்த நாளேட்டின் விருப்பு, வெறுப்பு, சார்புநிலை சார்ந்ததாகவும் அமைந்துவிடும் அபாயமும் உண்டு.
இந்நூல்களில் இடம் பெற்றுள்ள தலையங்கங்கள், தமிழக, இந்திய, பன்னாட்டு மக்களின் அன்றாட நடப்பு வாழ்க்கையுடன் தொடர்புடைய விஷயங்கள், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளால் விளையும் சாதக பாதகங்கள், மொழி, இலக்கியம் தொடர்புடைய தாக்கம், பாதிப்பு ஆகியன குறித்து, உரத்த சிந்தனைகளுடன் விவாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தலையங்கத்தின் கீழும், தொடர்புடைய ஒரு திருக்குறளும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதழியல் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய நூல்கள்.
- ஜனகன்