முகப்பு » வாழ்க்கை வரலாறு » மக்கள் தலைவர்

மக்கள் தலைவர் மூப்பனார்

விலைரூ.500

ஆசிரியர் : எம்.எஸ்.அமீது

வெளியீடு: ஆண்டவர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
ஆண்டவர் பதிப்பகம், 32, பஜார் தெரு, பல்லாவரம், சென்னை - 43. (பக்கம்: 376,)

ஜி.கே.எம்., எனும் மேஜிக் மூன்றெழுத்துக்கு, சொந்தக்காரரான கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார், ஓர் அசாதாரண அரசியல்வாதி. 2001 வரை எழுபது ஆண்டுகள், நம்மிடையே உலா வந்தவர். தனக்கென வாழாது, ஜாதி - மத வேறுபாடின்றி, ஏழை, எளியோர்க்கு உதவிக்கரம் நீட்டும் உத்தமராக, பொது வாழ்வில் கண்ணியம், எளிமை, தூய்மை கடைப்பிடித்து, மிதமாகப் பேசுவது, பணிவன்புடன் மக்கள் தொண்டாற்றுவது போன்ற சீரிய நற்பண்புகளுடன் வாழ்ந்து காட்டிய அரசியல் தலைவர்.மூப்பனாரின், 45 ஆண்டு கால பொது வாழ்வை சீர்தூக்கி ஆராய முற்படும் போது, இரண்டு குணவியல்புகள் பளிச்சிடுகின்றன. காங்கிரஸ் மீதிருந்த எல்லையற்ற பிணைப்பு, அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வந்த பாரதத்தின் முப்பெரும் தலைவர்களான நேரு, இந்திரா

மற்றும் ராஜிவ் ஆகியோர் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய பாசமும், நேசமும் முக்கியமானதாகும்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பதவி கிடைக்கப் பெற்றதும், பல்வேறு மாநிலங்களில் அரங்கேறிய கோஷ்டிப் பூசல்களுக்கு அவர் கண்ட சாணக்கியத்தீர்வும், இரண்டு முக்கிய நாயகர்களான ராஜிவ் மற்றும் தேவகவுடாவை பிரதமர் அரியாசனத்தில் அமர வைத்தது போன்றவை வரலாற்றுப் பெட்டகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை!

மத்திய அமைச்சர் மற்றும் மாநில ஆளுனர் பதவிகளையெல்லாம் துச்சமென மதித்தவர். பாரத நாட்டின் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தவர்.

கர்நாடக இசையில் மூப்பனாருக்கு இருந்த ஈடுபாடு, திருவையாறு தியாக பிரம்மோத்சவ சபைக்குத் தொடர்ந்து, 21 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பை ஏற்க வைத்ததுடன், ஆராதனை நிகழ்ச்சிகள் யாவும் நேரலையாக வானொலி,"டிவி வாயிலாக உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்குச் சென்றடைந்து, இசை இன்பத்தை பருகச் செய்தவர் அவர்.

மக்கள் தலைவர் மூப்பனார், காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டுக்கும் ஆற்றிய அரும்பெரும் நற்பணிகள் யாவையும், நினைவலைகளாக ஓடவிட்ட கணக்கிலா புகழஞ்சலிகளின் தொகுப்பு இந்நூல். அவருக்கெனவே, அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலில், அவரது சுருக்கமான வாழ்க்கை சரிதை இடம் பெறாதது மிக பெருங்குறையே!

மேலும், அவர் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த சூழல், உண்மையான காரணங்கள் மற்றும் பிரதமர் பதவியைத் தட்டிக் கழித்ததின் பின்னணியில் செயல்பட்ட தீய சக்திகள் போன்ற, வரலாற்று நிகழ்வுகள் இதில் காணோம் .

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us