சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், இந்நூலின் நாயகர் நீதிபதி எஸ்.ஜெகதீசனின் வாழ்க்கை வரலாறு, இன்றுள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டம் பயில்வோர் மற்றும் நீதி, நேர்மையுடன் வாழ நினைப்போர் எனப் பல வித நிலையில் உள்ளோர்க்கு, ஒரு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்கள், குறிப்பாக, தலைமையாசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், எங்ஙனம் திகழ வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் எப்படித் தங்களுக்குள் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்நூல் மிக நயமாக எடுத்துரைக்கிறது.
வீட்டின் சொந்தக்காரருக்கும், குடித்தனக்காரருக்கும் ஏற்பட்ட வழக்கில், நீதிபதி ஜெகதீசன் அளித்த தீர்ப்பை படிக்கும்போது, வழக்கறிஞர்கள் சிலரின் தவறான செயல்களையும், நீதிபதியின் மனசாட்சிப்படியான நேர்மையையும் அறிகிறோம். நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிபதியின் கருத்துக்களும், செங்கல்வராயன் அறக்கட்டளை வழக்கில் அவரின் கண்டிப்பும், எத்திராஜ் மகளிர் கல்லூரித் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டும், படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளன.
நீதிபதி எஸ்.நடராஜன், தம் அணிந்துரையில் இந்நூல் ஜஸ்டிஸ் ஜெகதீசனுக்கு புகழ் சேர்ப்பதற்கு அல்ல; ஆனால், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன் தரும் நூல் என்று கூறுவது முற்றிலும் சரியே.
பழகு தமிழில், பிழையில்லாமல் படிக்கச் சுவையாக எழுதியுள்ள நூலாசிரியரின் பணி போற்றுதலுக்குரியது.
டாக்டர் கலியன்சம்பத்து