தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல். தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும் இலக்கணம் உண்டு. அகம், புறம் என, வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம்.
மூதறிஞர் தமிழண்ணல் ‘புலமையருள் புலமையர்’ தொல்காப்பியத்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் – தலைவியர் இலக்கணம் வகுத்துள்ள பாங்கில், இருவர்க்கு இடையிலான பொருத்தங்கள் பேசப்பட்டுள்ளன.
பிறப்பு, ஒழுக்கம், ஆள்வினை, அகவை, அழகு, அன்பு, அடக்கம், அருள், அறிவு, செல்வம் என்னும் பத்தும் தலைவன், தலைவியரிடையே அமைய வேண்டிய ஒப்புமைகள். இவற்றுள் அகவை என்னும் வயது இருவருக்கும் சமமாய் இருத்தல் எனப் பொருள் கொள்ளலாகாது. பன்னிரண்டு, பதினாறு (பெண், ஆண்) என்னும் தன்மையே ஆகும்.
பொருத்தங்கள் பற்றி மட்டும் பேசாது, தமிழர் காதல் வாழ்வின் மேன்மை பற்றியும், தமிழர் திருமணமுறை பற்றியும் தெளிவாக, நுட்பமாக ஆராய்கிறது இந்நூல். தமிழுணர்வாளர் யாவரும் படித்தறிந்து மகிழத்தக்க நல்ல நூல் இது.
கவிக்கோ ஞானச் செல்வன்