செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை.
தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது; நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் நாடிக் காலம் போவதை விடத் தமிழ் மொழி, தமிழ்ப் பிள்ளையர்க்குக் கட்டாய பாடமாக்கி ஆவன செய்தல் சாலும். தமிழ் வழியில், படிப்பு அமைதலும் இன்றியமையாதது.
பெருஞ்சித்திரனார், பாவேந்தர், தி.வே.கோபாலையர், பொ.வே.சோமசுந்தரனார், ஈழத்துப் பூராடனார், தென்னாப்பிரிக்கத் துரையனார் அடிகள் போன்ற அறிஞர்களின் கருத்துக்கள், நூலில் விளக்கம் பெறுகின்றன. ஒப்பாரிப் பாட்டு பற்றியும், ஆராயப்பட்டுள்ளது. உயர்கல்வி உயர வழிகள் சிந்திக்கப்பட்டுள்ளன. பல வகையாலும், பயன்மிக்க கட்டுரைகள் கொண்ட நூல்.
- கவிக்கோ ஞானச் செல்வன்