சிறுவர் மனதில் செயல்திறனை வளர்த்து, நம்பிக்கையை ஏற்படுத்தும் பணி மிகவும் சிறப்பான ஒன்று. அதற்கு கதைகளாக கருத்துக்களை சொல்லும் பாணியில் கைதேர்ந்தவர் ஆசிரியர்.கவிஞர் கண்ணதாசன், வை.மு.கோதைநாயகி நாஞ்சில் நாயகன் தினமலர் டி.வி.இராமசுப்பைய்யர் என்று எட்டு வழிகாட்டிகளை ஆசிரியர் அழகாக படம் பிடித்திருக்கிறார்.
வழிகாட்டியாக வாழ்ந்த இவர்களின் படம், வாழ்க்கைக் குறிப்பு, நடந்த முக்கிய சம்பவம் என்பதை கதையாக சொல்லியிருப்பது அருமை. ‘தினமலர்’ இராமசுப்பைய்யர் ஒவ்வொரு வீடாக சென்று தாம்பூலம் கொடுத்த செயல், காந்தி பாடசாலையில் சிகாமணி என்ற மாணவர் கணக்குப் பாடத்தில் பெற்ற குறைந்த மதிப்பெண் பாதிப்பை மாற்றிய அழ.வள்ளியப்பாவின் இளமைக்கால அன்பு என்று பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. மாணவ, மாணவியர் மனதில் நல்வித்துக்களை பதிக்கும் நூல்.