உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தக் காரணமாக அமைந்த பெருமை, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சேவியர் தனிநாயக அடிகளாருக்கே உரியது. மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர் அடிகளார். இந்தியாவிலும், பிறநாடுகளிலும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியர்களை ஒன்று கூட்டி, ஆண்டு தோறும் உலக அளவில், தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்த வித்திட்டவர், வினையாற்றியவர். ஐரோப்பிய மொழிகள் பலவும் கற்றுத் தேர்ந்த, பன்மொழிப் புலவர் இவர்.
அமெரிக்கா, ஜப்பான், சோவியத்து நாடுகள், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், ஆப்பிரிக்கா, நடு கிழக்கு நாடுகள் என்று, 35 நாடுகளுக்கு சுற்றுச் செலவு மேற்கொண்டு, தாம் உணர்ந்த, அறிந்த செய்திகளை, ஒன்றே உலகம் என்னும் இந்நூலில் நமக்களித்துள்ளார். சுற்றுச் செலவு (பயணம்) என்பது, ஒரு கலை. அந்தக் கலையின் நுட்பமுணர்ந்து, நமக்கும் உணர்த்தியுள்ளார் அடிகளார்.
அவர் சென்று கண்ட நாடுகளில், மக்கள் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிபம், கலைகள், பொழுது போக்குகள் பண்பாட்டு நிலைகள் அனைத்தையும், ஊடுருவிக் கண்டு விளக்கியுள்ளார்.
எத்தனை வேறுபாடுகள் இருப்பினும், உலகம் முழுவதும், மனிதன், மக்கள், சமூகம் என்பது ஒன்றுதான். அதை உள்ளடக்கி, ஒன்றே உலகம் எனும் தலைப்பும், அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும், தமிழ் பெற்றுள்ள சிறப்பும், இடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறத்தக்க நல்ல நூல்.
கவிக்கோ ஞானச்செல்வன்