தமிழுக்கு வளம் சேர்ப்பதில், கொங்கு நாட்டின் பங்கு, மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இது போல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் நடையில், படித்து நுகரலாம்.
இந்த ஆய்வு நூல், கொங்கு தமிழ்ப் படைப்பாளிகளின் மண்நேசத்தை மதிப்புறு வகையில், 15 ஆய்வுக்கட்டுரைகளாகத் தந்துள்ளது. கொங்கு தமிழைப் பற்றிச் செல்லும் போது, மலையளவு மரியாதை, அடிக்கரும்புச்சுவை, வெல்லக்கட்டிகளால் சொற்குவியல் என்று, படுகளம் நாவலாசிரியர் ப.க.பொன்னுசாமி எழுதியுள்ளார்.
தமிழகத்தில் காணாமல் போய்விட்ட, 1,500 கிராமங்களின் ஊடே, கொங்குமார் சிற்றுார்களில் நடக்கும் கேளிக்கை சம்பிரதாயம், நம்பிக்கைகளை, கவிஞர் சிற்பியின் கவிதைகளில் தேடிக்காணும் கட்டுரை, மிக அற்புதம். காங்கிரீட் நாகரிகத்தின் கவியல்ல நான், காடுகளின், ஆறுகளின், மலைகளின் கவி என்று கவிஞர் சிற்பி போடுவதே, கொங்கின் தனி முத்திரை ஆகும். கொங்கு மணம் கமழும், தங்கத் தமிழ் ஆய்வு நூலிது.
முனைவர் மா.கி.ரமணன்