தேவ்தத் பட்நாயக், குருசரண் தாஸ், ஜானகி அபிஷேக் ஆகியோர், மகாபாரதக் காப்பியத்தை, பல கோணங்களில் அலசி, ஆராய்ந்து நூல் எழுதி வருகின்றனர். ஒரு காப்பியக் கதை என்ற கண்ணோட்டத்தில், கதாபாத்திரங்களின் குணசித்திரங்கள் மிகுந்த சிந்தையுடன், மதிப்பீடு செய்யப்படுவதை, இந்த நூலில் பார்க்க முடிகிறது.
பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதம், கர்ணனின் கொடைச்சிந்தனை, அர்ஜுனனின் அற்புத வில்லாற்றல், விதுரரின் ராஜநீதி, கிருஷ்ணனின் சாரதி ஊழியமும், கீதை உபதேசமும் என, மகாபாரதக் காப்பியக் கதையிலிருந்து பிரித்து எடுத்து, தனிமைப்படுத்தி, அவற்றின் உள்நுணுக்கங்கள் பற்றி, அவரவர் தம் அறிவாற்றலுக்கு ஏற்ப விவாதிக்க முடியும்.
மூலக்கதைக்குள் இருந்தவாறு, இந்த விவாத – விதண்டவாதங்கள் இருப்பின் நல்லது; அதனால், மூலத்திலிருந்து பல மொழி பெயர்ப்பாளர்களின், சொந்தக் சரக்கையும் சேர்த்து எழுதப்பட்ட மறுபதிப்பு, மறுவார்ப்பு தகவல்களையும், தன் அலசல் விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துவது, சற்றே கவலையைத் தரக்கூடியது. எழுதுபவர்களின், சுதந்திரச் சிந்தனைகளுக்குள் குறுக்கிட முடியாது; குறுக்கிடவும் கூடாது என்பதும் சரியே.
இந்த நூலில், கவுரவர்கள் அதிபராக்கிரமசாலிகள், வெல்லவே முடியாதவர்கள் என்பதை நிலை நிறுத்த, ஆசிரியர் சில வாதங்களை முன் வைக்கிறார். ஆனால், அதர்மம் ஒழிக்கப்படவேண்டும் என்றால், தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும் என்றால், எப்படிச் செயல்படவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் காப்பியமாகத்தான், மகாபாரதம் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக போற்றப்படும், இந்த மகா காப்பியத்தை விரிவாக, விவாதப் பொருளாக்குவோர், இதையும் மனதில் இறுத்தி விவாதித்தால், இவர்களின் அலசல் பார்வை, மேலும் கூர்மையாக அமையும் என, சொல்லத் தோன்றுகிறது.
ஜனகன்