திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினெண்கீழ் கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி, நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் உள்ளன. நான்கடி வெண்பாக்கள் நானூறு உள்ளமையால், இந்நூலுக்கு ‘நாலடி நானூறு’ என்ற பெயரும் உண்டு.
வாழ்க்கைக்குப் பயன்படும் கருத்துக்களைக் கூறும் இந்த நூலிலுள்ள, 400 செய்யுள்களுக்கும் புலியூர் கேசிகன் விளக்கவுரை எழுதியுள்ளார். பல நூல்களுக்கும் உரை கண்ட
அவருடைய உரை சிறப்பாக அமைந்துள்ளது. மாணவர்களும், மற்றவர்களும் படித்து, வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்நூல் உதவும்.
பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்