‘கனவுகள் என்பவை தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்க விடாமல் பார்த்துக் கொள்பவை தான், நமது கனவுகளாக இருக்க வேண்டும்,’ என்று வேண்டிக் கொண்டவர் ஒரு கோடியே அறுபது லட்சம் பிஞ்சு உள்ளங்களில் நிரந்தர இடம் பிடித்த நாயகர் அவுல் பக்கர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம். தமிழகத்தின் கடைக்கோடித் தென்குமரி கடற்கரைத் தீவில் – ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர், புகழின் உச்சத்தை தொட்ட வாழ்வியல் சரிதை நூல் தான் இந்நூல்.
அவரது மழலைப் பருவத்து நினைவுகளில் அசை போட்டு, 2014 வரை வாழ்வியலில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூரும், 168 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு கீதோபதேசம். வாழ்வியல் முறைகள், பெற்றோரைப் போற்றுதல், நட்பை உயிர் போல் மதித்தல், உண்மை, நேர்மை, கடமை, உழைப்பு, மானுட நேசிப்பு, இறைவழிபாடு, நடுநிலை, இத்தகைய பண்பாட்டு விழுமங்களை தெய்வம் போல் போற்றி வளர்த்துக் காத்துக் கொண்ட கர்மவீரர் நமது மேதகு அப்துல் கலாம்.
தந்தையின் அதிகாலை நடைப் பயணத்தில் இருந்து துவங்கி, நன்றியோடு 14 தலைப்புகளில் பல செய்திகளைப் பதிவு செய்துள்ளார். உதவியை வெளியே தேடுவது ஒரு போதும் இறுதி விடையல்ல.
வாழ்க்கை என் மீது திணித்த பல பின்னடைவுகளிலும், தோல்விகளிலும், வலிமையை நான் எனக்குள்ளேயே தேடிப் பார்ப்பதற்கான சக்தியை எனக்கு அருளியவர் எனது தந்தை. தோல்வி எனும் கசப்பு மருந்தை சுவைக்காமல் ஒருவரால் வெற்றிக் கனியை போதுமான அளவுக்கு ருசிக்க முடியாது’ தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் தான் எனக்கு துணையாயிருந்திருக்கின்றன. இப்போதும் கூட. கடின உழைப்பு, பக்தி, படித்தல், கற்றல், மன்னித்தல் ஆகியவை தான்
என் வாழ்வியல் நெறிகள். இது வாழ்வியல் சரிதை நூல். வயது வித்தியாசம் பாராது அவரவர்கள் தங்களது வாழ்வியல் நெறியை வகைப்படுத்திக் கொள்ள வாசித்துப் பூஜிக்க வேண்டிய நூல்.
குமரய்யா