களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம் புகுந்து, வெற்றி கண்ட தமிழர் தளபதிகள், அதியன் துவங்கி, குதிரை மலைப்பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், வில்லவன் கோதை, பரஞ்சோதியார், கருணாகரன் இவ்விதமாக, 16 தளபதிகளின் சுருக்க வரலாறுகளை, அவர் காலத்தே வாழ்ந்த புலவர்களின் பாடல்கள் மூலம் படைச் சிறப்பை, போர்ப்பண்பை, மறவர்களின் மாண்பை விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
‘‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’’ என்ற உயர்நோக்குடைய தளபதிகளில், முயல் வேட்டம் புரிவோன், செயலினும் யானை வேட்டம் புரிவோன் செயலே, நனி பாராட்டுக்குரியராம்’’ எனப் பல்வேறு இலக்கியப் படைப்புகளை எடுத்துக்காட்டியுள்ள ‘‘தோற்றுவாய்’’ கட்டுரை ஆசிரியரின் புலமை நலத்தை உணர்த்தும் அருமையான ஒன்று.
பின்னலூரான்