‘‘இந்தியரின் – தமிழரின் சமூக, மதம் சார்ந்த, கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும், முழுமையான ஆய்வு நூல் இது என்று, இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை முறை, முரண்பாடுகள், சீர்குலைவு, வீழ்ச்சி, நுண்கலை வளர்ச்சி போன்ற பலவும், விரிவாக ஆராயப்பட்டுள்ளன. நூற்செய்திகளுக்கு ஆதாரங்கள், அடிப்படைகள் நிரம்பச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, தக்கவாறு ஒளிப்படங்கள் அச்சாக்கம் பெற்றுள்ளன.
தேவதாசி என்பதற்குத் ‘தேவரடியாள்’ என்பது பொருள். அதாவது, கடவுளின் ஊழியர் எனலாம். ஓர் கோவிலில் உறையும் கடவுளின் சேவைக்காக என்றே, தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நடன மங்கை அவள். சங்க காலம் துவங்கி, வழக்கத்தில் இருந்ததென்றாலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டு முடிய, மிகவும் பிரபலமாக இருந்து, இந்த ‘தேவரடியார்’ முறை பதியிலார், தளிச்சேரிப் பெண்டுகள், எம்பெருமான் அடியார் எனும் பெயர்களும் தேவதாசிகளைக் குறிப்பனவே.
கோவிலைத் தூய்மை செய்தல், மாலை தொடுத்தல், பூஜைக்கு வேண்டியவற்றை சேகரித்துத் தருதல், திருவிழா நாட்களில் நடனமாடுதல் என்றிருந்த நிலை, காலப்போக்கில் சீரழிந்து போன கதையை விரிவாகச் சொல்லும் இந்நூல், சமூக ஆர்வலர்களுக்கு மிகவும் பயன்படும் நூலாகும். எவரும் படித்தறிய ஏற்ற நூலும் ஆகும்.
கவிக்கோ ஞானச்செல்வன்