கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும் விதம் சிறப்பானது. ஆயர்பாடியில், யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும் அடையவில்லை. யசோதை பெற்ற இன்பத்தை பெற இயலவில்லையே என்று, புலம்புகிறாள் தேவகி.
‘நந்தன் பெற்றனன், நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே!என்கிறாள். அதேசமயம் வசுதேவரும், தாய் தேவகியும் கண்ணனை பரம்பொருள் என்று உணர்ந்ததால், கம்சன் வதம் முடிந்ததும், நேரில் கண்ட போது, கண்ணனை கட்டித் தழுவி மகிழ தயங்கினர். மாமாயன் கண்ணன் அதை உணர்ந்து, அவர்களுக்கு மாயையை உணர்வித்து, புத்திர பாசத்தை ஏற்படுத்தியதும், அவர்கள் அவனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். தாய், தந்தையரை சிறையில் இருந்து மீட்டது மட்டுமின்றி, பெற்றோர் எதை முதலில் விரும்புவர் என்பதைக் காட்டி, அதிலும் தன் அளவு கடந்த கருணையை காட்டிய விதம், புரியும் விதத்தில் சொல்லப்பட்டிருப்பது அழகாகும். இப்படி பல கருத்துகள் கொண்ட நேர்த்தியான நூல்.
எம்.ஆர்.ஆர்