திருவையாறு அரசர் கல்லூரியில், 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சான்றோர் எச்.வேங்கடராமன். அவர் உருவாக்கிய மாணாக்கர்களில் பலர் இன்று பெரும் பேராசிரியர்கள், அவர்களில் பணிஓய்வு பெற்றோர் பலர்.
அவர் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகும். அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி பிறரால் எழுதப் பெற்ற கட்டுரைகள் சிறந்த கருத்துகளைக் கொண்டவை. நாளிதழில் அவர் எழுதிய நூல் மதிப்புரை பகுதிகள் இந்நூலில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. நற்றிணை போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ள இவ்வறிஞரின் கடமை உணர்ச்சியும், தன்னலம் பாராமல் பிறர்க்கெனவே வாழ்ந்த பண்பும் படிப்போரை வியக்கச் செய்கின்றன. அவருடைய மக்கள் அளிக்கும் செய்திகளும், நூலில் இடம் பெற்றுள்ளன.
போற்றிப் பாதுக்காக்கப் பெற வேண்டிய இந்த நூலை அவருடைய திருமகளார் பெருமுயற்சியுடன் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழுணர்வு, சமூக உணர்வு முதலியவற்றால் உயர்ந்து, பண்பாட்டின் இமயமாய்த் திகழ்ந்த பேராசிரியர் எச்.வேங்கடராமனின் நினைவு மலர் தமிழ் மணக்கும் அழகுமலர்.
பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்