திப்பு சுல்தான் ஆங்கிலேயேருடன் போரிட்டுக் களப் பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர் மற்றும் கொங்கு நாட்டுப் பகுதிகள் பற்றி, ஒரு களஆய்வு செய்ய எண்ணினார் அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மார்க்விஸ் வெல்லெஸ்லி பிரபு. இப்பொறுப்பு டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவரிடம் அளிக்கப்பட்டது.
டாக்டர் புக்கானன் அதை ஏற்று, வழிகாட்டி, காவலர்கள், மொழி பெயர்ப்பாளர், படம் வரைபவர் ஆகிய குழுவினருடன் மதராசில் இருந்து புறப்பட்டுச் சென்று, விரிவான பயணம் நிகழ்த்தி, பல தரப்பட்ட மக்களையும், சந்தித்து உரையாடித் தொகுத்த விஷயங்கள் மதராசிலிருந்து புறப்பட்டு மைசூர், கனரா மற்றும் மலபார் நாடுகளிடையே மேற்கொண்ட சுற்றுப்பயணம், என்கிற தலைப்பில் ஆங்கில நூலாக வெளியிடப்பட்டது.
இதில் புதைந்து கிடக்கும் தமிழக வரலாறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கொங்கு நாட்டு மக்களின் வாழ்வியல், பண்பாடு, விவசாயம், நெசவுத் தொழில் விவரங்கள் என, பல்வேறு செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அவற்றை வேறு பல நூல்களின் ஆய்வுகளோடு ஒப்பிட்டுத் தொகுத்துள்ளனர், இருபெரும் வரலாற்று அறிஞர்கள். தமிழக வரலாற்று ஆய்வுக்கு மிக உதவிகரமாக அமைந்துள்ள ஒரு புதிய வரவு எனலாம்.
கவுதமநீலாம்பரன்