நூல் ஆசிரியர், வடசென்னையில் பிறந்தவர்; ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணிபுரிகிறார். ‘இன்று முதல் தமிழகம் எங்கும்’
என்பது உள்ளிட்ட நான்கு நூல்கள் எழுதி உள்ளார்.
போர் விமானங்கள் பற்றி, தமிழில் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாக தான் இருக்க முடியும். சிறிய நூலாக இருந்தாலும் செறிவான நூல். நூலின் முதற்பகுதியில், விமானம் உருவானதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பற்றிய வரலாற்றின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அதில், தமிழின் சிலப்பதிகாரம், புறநானூறு மற்றும் சீவக சிந்தாமணியில், வானவூர்தி பற்றிய குறிப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.
வலவன் ஏவா வானவூர்தி என புறநானூறு, பைலட் இல்லாத விமானத்தைப் பற்றி குறிப்பிடுவதையும் பதிவு செய்துள்ளார். இரண்டாவதாக, விமானம் எப்படி மேல் எழும்புகிறது? அதற்கான விசை இயக்கம் எப்படி நடக்கிறது என்பதை படங்களுடன் விளக்கி உள்ளார்.
மூன்றாவதாக, விமானத்தின் வேகம் பற்றியும், அதை அதிகரிப்பது, குறைப்பது, அதில் உள்ள ஆபத்துகள் பற்றியும் விவரிக்கிறார். நான்காவதாக, விமானியின் இருக்கை, ஆபத்து காலங்களில் அவர் எப்படி தப்ப முடியும் என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.
போர் விமான விமானிகள், அதற்கென பிரத்யேக கவச ஆடைகள் அணிய வேண்டும். அதன் மூலம், புவியீர்ப்பு விசையை தாண்டி விமானம் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கி கொள்ள இந்த ஆடைகள் உதவுகின்றன. அதுபற்றிய விவரங்கள், ஐந்தாவது பகுதியில் இடம் பெற்றுள்ளன.
அடுத்தடுத்த பகுதிகளில், போர் விமானங்களின் குண்டு எறிதல், ஏவுகணை வீசுதல், எரிபொருள் நிரப்புதல், தரையில் இருந்து அவற்றை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விவரங்கள் விளக்கப்படுகின்றன.
எதிரிநாட்டு விமானங்களை அடையாளம் காண உதவும் ரேடார் அலைகள் குறித்து விளக்கி உள்ளார். இறுதியாக, இந்திய அரசிடம் உள்ள போர் விமானங்கள் பற்றிய பட்டியலையும் அளித்துள்ளார். முக்கிய ஆங்கில சொற்களை, தமிழாக்கி உள்ளது; தேவையான படங்களை சேர்த்திருப்பது; இந்திய விமான படை வரலாறு, எளிய மொழிநடை ஆகியவை நூலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.