கடந்த, 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான, கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான்.
அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான, விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன.
வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை, கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், கானுயிர்கள் பற்றி அதிகளவு தெரிந்து வைத்திருந்தது, அவ்வப்போது விடுதலை செய்வதாக சொன்ன வீரப்பன், பின் மனம் மாறியது, ஜோதிபாசுவை, ‘யாருய்யா அந்த ஜத்தி பஸ்?’ என்று, வீரப்பன் கேட்டது என, சுவாரஸ்யமான, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சம்பவங்கள், புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.
தான் ஏன் துப்பாக்கி பிடிக்க நேர்ந்தது என்பதை, வீரப்பன் உணர்ச்சிகரமாக விவரிப்பது, தான் சேகரித்திருந்த புகைப்படங்களை நூலாசிரியர்களுக்கு காட்டி நெகிழ்ந்தது, யானைகளை தான் கொல்லவில்லை என சொல்வது, கடைசியாக, கர்நாடக முதல்வருக்கு வீரப்பன் விடுக்கும் வேண்டுகோள், பிடித்து வைத்திருந்தவர்களை விடுதலை செய்தபோது வீரப்பன் முதல் அவனது கூட்டாளிகள் வரை அனைவரும், கண் கலங்கியது ஆகிய பகுதிகள், கண்ணில் நீரை வரவழைப்பவை.
போலீசாராலும், பொதுமக்களாலும், பத்திரிகைகளாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காட்டு மனிதனின் கதையை, அருமையான தமிழில் தந்திருக்கிறார் பாவண்ணன்.