பருவநிலை மாற்றத்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 10 கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. முதல் கட்டுரை, குதிப்பு மீன்களின் அழிவு பற்றியது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட வாசிகளின் உணவு பழக்கத்தில், இந்த மீன் பெற்றிருந்த செல்வாக்கையும், தற்போது அதன் அழிவு நிலையையும் பதிவு செய்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் தேன் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி மற்றொரு கட்டுரை பேசுகிறது. தேன், இனி கசக்கும் என்ற உண்மையை பதிவு செய்துள்ளது. இது போல், சமகாலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி துல்லியமான தகவல் சார்ந்து, அனைத்து கட்டுரைகளும் பேசுகின்றன. புள்ளிவிவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
கட்டுரைகளுக்குள் உயிர்த்துடிப்பாக, அனுபவ பேட்டிகள் அமைந்துள்ளன. தமிழக வாழ்நிலையில் உலக அளவிலான சிந்தனை போக்கை வளர்ப்பதற்கான முயற்சியாக இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. கட்டுரைகள், பல இதழ்களில் பிரசுரமானவை. ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ஒன்றும், தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றம் சார்ந்து, உலக நிகழ்வுகள் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் சார்ந்த தமிழ் கலைச் சொற்கள் தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக முயற்சி முக்கியமானது; வரவேற்கத்தக்கது. தமிழக சிந்தனை போக்கில், மாற்றத்தை ஏற்படுத்துவது.
அமுதன்