புத்தகங்களின் சிறப்பை, வாசிப்பதன் அவசியத்தை பற்றி முழுக்க முழுக்க சொல்வதற்காகவே ஒரு புத்தகம்! புத்தகங்கள் பற்றி, பல்வேறு அறிஞர்கள், பல்வேறு புத்தகங்களில் எழுதியுள்ளவற்றை தேர்வு செய்து, தொகுத்து ஒரு புத்தகமாக்கி இருக்கிறார், 114 புத்தகங்கள் எழுதிய ‘தமிழ்த்தேனீ’ மோகன். ‘என்னை கவர்ந்த புத்தகங்கள்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கட்டுரை துவங்கி ஜெயகாந்தன், தமிழருவி மணியன் என, 26 அறிஞர்களின் கட்டுரைகள், ‘கட்டுரை மலர்கள்’ என்ற அத்தியாயத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதிதாசன், வைரமுத்து உட்பட, ஆறு கவிஞர்களின் கவிதைகள் ‘கவிதை மாலை’ என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பற்றி, மார்டின் லூதர் கிங் முதல் ஷேக்ஸ்பியர் வரை சொன்ன முத்தான 100 மொழிகளை தேர்வு செய்து, ‘புத்தக மொழிகள் 100’ என்ற தலைப்பில் தந்திருக்கின்ற அத்தனையும் அமுதம்! இளையதலைமுறை வாசிப்பு பழக்கத்தை ‘வசதியாய்’ மறந்து விடக்கூடாது. இரா.மோகனின் முயற்சி, புத்தகங்களின் அருமையை இவர்களுக்கு உணர்த்தும். புத்தக காதலர்களுக்கு இதுவும் ஒரு பொக்கிஷம்.
ஜி.வி.ஆர்.,