சிந்துவெளி நாகரிகம், வேதகாலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து கலாசாரமும். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ஆழி பெரிது என்ற நூல் இந்து பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும், வரலாற்றுப் புதிர்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் அறிவு பூர்வமாகவும் அதேநேரம், மிக சுவாரசியமாகவும் முன்வைக்கிறது. தமிழ்பேப்பர் இணைய இதழில் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
வேத ரிஷிகளின் மகத்தான ஞானம் இயற்கை, பிரபஞ்சம், மனிதன், ஜீவராசிகள் என, அனைத்திலும் ஒத்திசைவு காணும் பார்வையை அளிப்பதை நவீன, சமகாலத்திய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு மிக அழகாக அலசுகிறார், சிறந்த சிந்தனையாளரான அரவிந்தன் நீலகண்டன்.
வேதங்களை இயற்றிய ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தவர்களா? சோமபானம் என்பது எந்தவகை பானம்? தமிழ்ப் பண்பாட்டுக்கும் வேதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? சூத்திர ரிஷிகளும் இருந்தார்களா? அம்பேத்கர் வேதகால ஜாதி அமைப்பு பற்றி என்ன கூறுகிறார்? பச்சை அம்மனின் வேர்கள், ரிக்வேதத்தில் உள்ளதா? இன்றைய நவீன வாழ்வில் பழைய இந்து பண்பாட்டுக்கு என்ன இடம்? -இதுபோன்ற கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடை காணும் முயற்சியாகவும் இந்த நூலைக் கருதலாம். ஆர்வமும் தேடலும் கொண்ட தமிழ் வாசகர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்.
ஜடாயு