‘மருத்துவம் என்றால் மருத்துவம் மட்டும் தெரிந்தால் போதாது; சரிவிகித உணவை, எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்’ என்ற கொள்கையில், தீராத பற்று உடையவர் போலும்; புத்தகத்தில் புகுந்து விளையாடி விட்டார் மருத்துவர் சிவராமன்.
மருத்துவத்தினூடே, உணவு பொருட்களின் பயன்பாட்டையும், அதை பக்குவப்படுத்தும் விதத்தையும் சொன்னவர், மேலை நாட்டு நாகரிக மோகத்தில் விழுந்து, மக்கள் புரள்வதை கண்டு சகியாதவராய், தன் முழு கோபத்தையும், நகைச்சுவை உணர்வுடன் வெளிக்காட்டி இருப்பது, இனிமையாய் இடித்துரைப்பதில், இவருக்கு நிகர் இவரே என சொல்ல வைக்கிறது.
தாய்ப்பால் துவங்கி, முதுமையில் உட்கொள்ளும் உணவு வரை, அனைத்தையும், வகை வகையாய் பிரித்து, இந்த நேரத்தில், இதை தான் சாப்பிட வேண்டும் என்பதையும், அதிலும், நம்மூர் காய்கறிகளும், தானியங்களும் தான், உலகிலேயே மிக சிறந்தவை என்பதையும், பட்டியல் போட்டு, அறிவியல் ரீதியாக, அலசி ஆராய்ந்து, கொடுத்திருக்கிறார்.
‘ஆஸ்திரேலிய ஓட்சும்; முத்து முத்தாய் மலர்ந்ததால் கண் பட்டதோ, என்னவோ, மிஷினுக்குள் இறக்கி, தட்டையாக்கி, பல ரசாயனங்கள் கலந்து பதப்படுத்தி, அட்டை பெட்டியில் புகுத்தி, வெளிவரும் மக்காச்சோளமும் இன்று கொடிகட்டி பறக்கின்றன. நம்மூர் கேழ்வரகுக்கும், தினைக்கும், கைக்குத்தல் அரிசிக்கும் இவை ஈடாகுமா’ என, அறிவியல் ரீதியாக தர்க்கிக்கிறார். அதுவே, புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.
‘கிர்ணி பழ பெரிசில் கொய்யா; கொட்டை இல்லாத, நம்மூர் கொய்யா அளவில் திராட்சை, கண்ணை கவரும் நிறத்தில் ஆரஞ்சு என, வெளிநாட்டு இறக்குமதிகளை, வாயில் ஈ புகும் வகையில் பார்க்கும் நாம், அதில் என்ன சத்து இருக்கிறது என்பதை யோசிக்கிறோமா? ஒட்டு இனங்களான அவற்றில், இனிப்பு மட்டுமே மிஞ்சும் என்பதை அறிந்துள்ளோமா? இல்லையே!’ என, வேதனைப்படுகிறார்.
கீரையையும், மிளகையும் ஒதுக்கி தள்ளும் நம் வீட்டு குழந்தைகள், ‘டபுள் சீஸ் மார்கரிட்டா வித் மெக்சிகன் பெப்பர்’ என, பிட்சா கடைக்கு ஆர்டர் கொடுப்பதைப் பார்த்து, கொதித்து போகிறார். கடலுப்பு, கீரை உட்பட சில பொருட்களில் அடங்கிய சத்துக்கள் பற்றி, இன்னும் விளக்கி இருக்கலாம். நோயற்ற வாழ்வுக்கு, இந்த புத்தகம் ஒரு மருந்து.
மீனாகுமாரி