கவிதைகள் மீதான ஈர்ப்பு என்றுமே குறைந்து போனதில்லை. அது ஒரு நெடிய பயணம் தருகிற தனிமை சுகம். கவிஞர் வேல்கண்ணனின், ‘இசைக்காத இசைக் குறிப்பு’ கவிதை தொகுப்பு, ஒரு பெருநகரவாசியின் வெவ்வேறு நிற உணர்வுகளை, பிரதிபலிக்கும் நிதானத்தை தொட்டிருக்கிறது. இது அவருடைய முதல் தொகுப்பு.
என்று துவங்கும் கவிதையொன்று, வாழ நேர்ந்த காலத்தின் பெரும்பகுதி என்னவாயிருக்கிறது என்பதை சொல்லிச் செல்வதுடன், வலியது வெல்லுமென்ற சமாதானங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேல்கண்ணனின் வரிகள், காதலுக்கான ஒரு பயணத்தை நோக்கி, நம்மை இட்டு செல்கின்றன.
நான் சேகரித்திருக்கும்
பெருமழைநாளில் கிடைத்த
உன்னுடைய வெப்பம்
என்று காதல் இழையும் தருணத்தை சொல்லியபடி...
ஆலமர ஊஞ்சலில் ஆடிய பருவங்களை
மீட்டுத்தந்த உன் படர்ந்த மடி
இதழ் மடிப்புகளில் ஒளிந்திருக்கும்
எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்
என்ற முத்தாய்ப்போடு, ஒரு காதல்
கோரிக்கையும் வைக்கிறார்...
மீண்டும் ஒரு பார்வையைக் கொடு, இன்னும் செல்லவேண்டும்
என்று
வாழ்வை புறக்கணிப்பதோ, ஏற்புடையதல்லாத ஒன்றை நிராகரிப்பதோ, தொடர்ந்து ஏதேதோ காரணங்களோடு நடந்தபடி தான் இருக்கிறது.
அதை உறுதிபட சொல்ல முடிந்திருக்கிற ஒரு கவிதை, தன்னுள் வைத்திருக்கும் படிமத்தை உச்சமேற்றுகிறது.
நிராகரிப்பு என்னும் ஆயுதம் ஒன்றுதான் கையாளும் முறைகள்தான் வெவ்வேறானவை இந்த கவிதைக்கு காரணமான நிம்மி, அதனை கையாண்ட விதம், கவிஞனை அமைதியிழக்க செய்து விடுகிறது.
வெளியேற்றம், முள்வேலிகளுக்கு அப்பால், இறுதிச் செய்தி, நிழற்படம், தற்காலிகமாக, ஒப்பம், புலப்படா வெளிச்சம் – என்ற தலைப்புள்ள கவிதைகள் கடந்தகால அடையாளங்களோடு நிகழ்கால அரசியலைப் பதிவு செய்கின்றன. ஒரு பேரிழப்பை எதிர்கொண்ட ஈழத் தமிழர்களின் மீதான இனஉணர்வை காத்திரத்தோடு கூடிய கேள்விகள் கொண்டு குரல் எழுப்புகின்றன அதிலுள்ள வரிகள்...
விடை பெறுவதற்கான அவசரமும் நெரிசலும் நமக்கு பக்கத்திலேயே கிடந்தன...
வரும் நாட்களில் சந்திக்க நேருமானால் என் முகத்தை பிட்டத்திலும் உன் முகத்தை தோள்பட்டையிலும் வைத்து கொள்வோம் வேல்கண்ணனின் கவிதைகள் தன்னுடைய முதல் தொகுப்பிலேயே வெவ்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
கவிதைக்காரன் இளங்கோ