இலக்கிய தென்றல் வீச, இனிதே ஒரு களப் பயணம். பூம்புகார் துவங்கி மங்களாதேவி கோவில் என போற்றப்படும், கண்ணகி கோட்டம் வரை, சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய இடங்களுக்கு, நம்மை கைப்பிடித்து அழைத்து செல்கிறார் நூலாசிரியர்.
திருக்கடையூர் மாதவி குட்டையே, மாதவி குளித்த குளம்; மதுரை மருவி மருதை ஆகவில்லை, மருத மரங்கள் நிறைந்ததாலேயே மருதை ஆயிற்று; வருடம் முழுவதும் மழைவளம் உடையது வருஷ நாடு; கண்ணகி மலைமுகட்டில் ஏறி தெய்வ நிலைபெற்ற, ‘விண்ணேற்றி பாறை’ தான், வண்ணாத்தி பாறை என, பல வியப்பூட்டும் தகவல்கள் நூலெங்கும் கொட்டி கிடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் இருந்து கல்லெடுத்து வந்து எழுப்பியது, ‘கண்ணகி கோவில் நடுகல்’. இப்போது காணப்படும் சிதிலங்கள், பல்லவர், சோழர்கால கட்டுமானங்கள் என, கூறியுள்ளது, ஆய்வுக்கு உரியது.
புலவர்.சு.மதியழகன்