தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்; மதுரையை நாயக்கர்கள் தான் ஆள வேண்டும்; மாடவீதியை மன்னார்சாமி தான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது.
இந்தச் சூழலில், பெ.சு.மணியின், ‘இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்’ என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட விடுதலைப் போரின் பின்னணி பற்றி இந்த நூல் பேசுகிறது.
அதிலும், தேசிய இயக்கமான காங்கிரசை தோற்றுவித்தவர், ஒரு ஆங்கிலேயர் என்பது ஆச்சரியமான செய்தி.
யார் அவர்? அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு.
‘‘நண்பர்களே! சகோதரிகளே! மதம், இனம், நிறம் முதலான பாகுபாடுகள் இல்லாமல், இந்தியாவை சொந்த நாடாக கருதும் அனைவரையும் வேண்டுகின்றேன். உயர்ந்தோர், தாழ்ந்தோர், எளியோர், படிக்காதவர்கள், படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள்
அனைவரையும் வேண்டுகின்றேன்.
‘‘இப்பொழுதே நீங்கள் ஒவ்வொருவரும், கொடுங்கோன்மை அமைப்பின் கீழ், நசுக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களுக்காகத் தைரியமாக உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
‘‘இது என்னுடைய நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பிரார்த்தனை. இது ஒரு முதியவனின் நம்பிக்கை. என் நம்பிக்கை நிறைவேற்றப்பட்டால், நான் அமைதியாக மகிழ்ச்சியாக இறப்பேன். இந்தியாவையும் கடவுள் வாழ்த்துவாராக!’’என்று எழுதினார் ஹ்யூம்.
ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார் என்பது குறித்து, ஒரு சர்ச்சை உள்ளது. ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து, சாம்ராஜ்யத்தைக் காபந்து செய்வதற்காகத் தான் அவர், காங்கிரசை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ஹ்யூமைப் பற்றிய புரிதலுக்கு இந்த நூல் உதவுகிறது. அதேநேரம், காங்கிரஸ் பேரியகத்தின் தோற்றம் பற்றி விரிவான தகவல்களை கொடுக்கும் இந்த நூலின் முன்பகுதியில், ஹ்யூம் என்ற பெயரைத் தேடிப் பார்த்தாலும் தென்படவில்லை. பாதி பக்கங்களைக் கடந்த பிறகுதான், அவரைப் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.
சுப்பு