வங்காளத்தின் புரட்சி இயக்கத்தில், ஒரு தூணாக நின்று செயல்பட்டவர் இந்த நூலாசிரியை. ஜுகாந்தர் என்ற புரட்சிக் குழுவில் சேர்ந்த இவர், வெளி உலகிற்கு, ஒரு மகளிர் தங்கும் விடுதியின் மேலாளர் பணிபுரிந்த படியே, புரட்சியாளர்களின் போராட்டத்திற்கு மறைமுகமாக உதவியவர்.
1932ம் ஆண்டு, பிப்., 6ம் தேதி, கோல்கட்டா பல்கலைக்கழக செனட் அரங்கில், கவர்னரைச் சுட்ட வீணாதாசுக்கு துப்பாக்கி தந்து உதவியவர் இவர்தான்! பலமுறை, அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டவர். விடுதலை
பெற்றபின், புரட்சிக் குழுவின் முடிவுப்படி, காங்கிரசில் சேர்ந்து பணியாற்றியவர். இவர் ஒரு இலக்கியவாதியும் கூட. ‘மந்திரா’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார். இந்த நூல், இவரின் சுயசரிதை என்றுகூட சொல்லலாம்.
தான் நேரடியாகத் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளுடன், வீணாதாஸ் போன்ற பல பெண் போராளிகளின் பங்களிப்பையும் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியை. மிக அருமையான மொழிபெயர்ப்பு.
சிவா