சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிடர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை, ஜோதிட மேதையாக பலர் கருதுகின்றனர். காரணம், மிகுந்த ஆராய்ச்சிகளுக்குப் பின், ஜோதிடத்தில் ஒரு புதுமுறையை அவர் அறிமுகப்படுத்தியதுதான். அதுவே, கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை. சுருக்கமாக, கே.பி., முறை என்று அழைக்கப்படும். இதில், உப நட்சத்திராதிபதியின் பங்கு மிக முக்கியமானது. இந்த, உப நட்சத்திராதிபதியே பலனை சிறப்பாக செய்யும் என்ற நிலை, எந்த ஜோதிட மேதையாலும் இன்று வரை சொல்லப்படாத விதிமுறை.
வான மண்டலத்தை 12 ராசிகளாகவும், ஒரு ராசிக்கு 30 பாகை எனவும் அவற்றிற்கு இரண்டே கால் நட்சத்திரம் எனவும், ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் (27x4 = 108 பாதம்) எனவும், ஒரு ராசிக்கு 9 பாதம் என்றும் (1 பாதம் – 3௦2O௦) என்றும் பிரித்துள்ளனர்.
இதில், கே.பி., முறையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நட்சத்திரத்தையும், 13O – 20O அதன் தசைகளுக்கு ஏற்ப ஒன்பது சமபாகமில்லாத நிலையில் பிரிக்கப்பட்டிருப்பது தான். அதற்கு உபநட்சத்திராதிபதி என்று பெயர் (Sub Lord).
கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையான, 360Oஐ, 249 பாகமாக அதனைத் தன் தசைக்கேற்ப பிரித்து, அவை 13O – 20O யில் இருக்கும் நிலையில், நட்சத்திராதிபதி என்றும், அதில் ஏற்பட்டுள்ள உட்பிரிவுகளுக்கு, உப நட்சத்திராதிபதி எனவும் (sub lord) பெயர் சூட்டினார்.
கே.பி., முறையில், ஒரு ஜாதகத்தின் பலனை கணித்து சொல்ல விரும்புவோர், முதலில் அந்த ஜாதகத்தை பின்வருமாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். ஒருவரின் பிறந்த நேரம், தேதி, ஊர் இவற்றைக் கொண்டு, கே.பி., எபிமரிஸ் அல்லது வாசன் பஞ்சாங்கத்தைக் கொண்டு சரியான லக்னத்தையும், கிரகங்களின் பாகையையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
பின், ‘யுனிவர்சல் டேபிள் ஆப் ஹவுசஸ்’ என்ற நூலைக் கொண்டு, ஒவ்வொரு பாவத்தின் ஆரம்ப முனையை, 12 பாவத்திற்கும் கணித்துக் கொள்ள வேண்டும்.
அதே முறையில், ஒவ்வொரு பாவத்திற்கும் நட்சத்திராதிபதி, உப நட்சத்திராதிபதி, ஒவ்வொரு கிரகத்தின் நட்சத்திராதிபதி இவற்றைக் கணித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த முறையில் பலன் காண சுலபமாக இருக்கும்.
இந்த நூலின் பிற்சேர்க்கையாக, கே.பி., உபநட்சத்திராதிபதி அட்டவணையை இணைத்திருக்கின்றனர். அதில், ராசி, நட்சத்திராதிபதி, உபநட்சத்திராதிபதியின் ஆரம்பம், முடிவு என்று, டிகிரி சுத்தமாக (மொத்தம் 249) தரப்பட்டிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளில், ஒவ்வொரு பாகமாக, நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை, ஒரே புத்தகமாக இப்போது வெளியிட்டிருக்கின்றனர். கே.பி., முறை, தேர்ந்த ஜோதிடர்களுக்கே முதலில் விளங்கிக் கொள்ள ஒரு சவாலாகவே தோன்றும். இந்நூலாசிரியர் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் விளக்கியிருந்தாலும், கே.பி., முறையைப் பின்பற்றி பலன் சொல்லும், அதன் பிரயோக முறையை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
மயிலை சிவா