1950களிலிருந்து பல்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது மு.ஸ்ரீனிவாஸனின் கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி. இதில் வரலாறு, கலை சார்ந்த அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக பெருமளவில் இடம்பெற்றுஇருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திராத, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் பற்றிய அருந்தொகுப்பாக உள்ளது இத்தொகுப்பு நூல்.
மொழிபெயர்ப்பாளர் பெ.நா.அப்புசுவாமியின் கடிதங்கள், சென்னையில் வாழ்ந்த துறவி சக்கரையம்மாள், கி.வா.ஜகந்நாதன்- வாழ்வும் பணியும், அரவிந்தரும் சுவாமி விவேகானந்தரும், லாலா லஜபதிராயும் விபின் சந்திரபாலும், ரவீந்திரநாத் தாகூர், திலகர், பி.எஸ்.ராமையா, எலிபண்டா குகைக்கோவில், ஜைனர்களின் சத்ருஞ்ஜயா, ஒடிசாவின் பவுத்த சின்னங்கள், கஜலட்சுமி சிற்பங்கள், நாக வழிபாடு, சிறுகதைகள், கவிதைகள் என்று அனைவரும் அறிந்து ரசிக்கும் விஷயங்களை அருமையாகவும் சுவாரசியமாகவும் தொகுத்து தந்துள்ளார்.
சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அப்புசுவாமி பற்றிய குறிப்புகளும்...
கிருஷ்ணராஜபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (கிவாஜ) கலைமகளில் (கதையின் கதை, கிழமைக் கதைகள், முதல் வரிக் கதைகள்) செய்த புதுமைகளும்...
‘இனி வரப்போகும் வருங்கால சந்ததியினருக்கு நவ இந்தியாவை நிர்மாணித்த சிற்பிகளில் ஒருவர் என்றே திலகரை வரலாறு காட்டும்‘ என்று மகாத்மா காந்தி சொன்னதுமாக நீள்கிறது தொகுப்பு.
விபின் சந்திரபால் கட்டுரையில், ‘தீவிரவாதம், மிதவாதம் என்பதைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தீவிரவாதம் என்றால் அடிப்படை அல்லது முழுமையான மாற்றங்களை விரும்பிய கட்சி என்றே பொருள். தீவிரவாதம் பயங்கரவாதமல்ல. சாத்வீக எதிர்ப்பு, ஊக்கமற்ற செயலற்ற எதிர்ப்பல்ல. அது பலாத்காரமற்ற எதிர்ப்பு’– பக்-72
மதுரையை எரித்தபின் கண்ணகி கடலைக் கடந்து முதலில் யாழ்ப்பாணத்தில் சுடுமலையில் தோன்றினாள். சுடுமலை கண்ணகி அம்மன், இன்று ராஜராஜேசுவரி என்ற பெயரோடு விளங்குகிறாள் – பக். -91
தமிழகத்திலிருந்து பாரதி சிலையை கல்கத்தா விவேகானந்தா பூங்காவில் நிறுவியபோது அதன் பீடத்தில் திறப்பாளர் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் இல்லை. வங்கத்தில் தமிழக வழக்கப்படி பீடம் முழுவதும் பெயர்களால் நிரப்ப மாட்டார்கள். சிலை நாயகரது பெயரும், மிகச்சுருக்கமாக அவரது பணியும், பிறந்த தேதியும், மறைந்த தேதியும் மட்டுமே பொறிக்கப்படும் – பக். 365, ஆகிய குறிப்புகள் முக்கியமானவை.
உத்தரமேரூரில் கட்டப்பட்ட சுந்தர வரதப்பெருமாள் கோவில் கருங்கல் அல்லாமல், சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது; இலங்கையில் உள்ள கதிர்காமம் இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மிக புனிதமான தலம் என்பது போன்ற தகவல்களும் நிரம்பி கிடக்கின்றன.
இளைய தலைமுறையினர் தவற விடாது அவசியம் படிக்க வேண்டிய சஞ்சரி, இந்த கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி.
ஸ்ரீநிவாஸ் பிரபு