‘சொர்க்கம் தாய்மார்களின் காலடியில் இருக்கிறது’ என்று, பெண்ணின் பெருமையை உணர்த்தியவர் நபிகள் நாயகம். ‘தன் சகோதரரின் உழைப்பில் வாழ்ந்து, இரவும், பகலும் இறைவனை வணங்கிய பக்திமானை விட, குடும்பத்தின் தேவைக்காக நியாயமான வழியில் விறகு வெட்டி பிழைத்த அவரின் சகோதரர் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்’ என, எடுத்துக் கூறியவர். ‘நீ எவ்வளவு கண்ணீர் விடுகிறாயோ, அவ்வளவு பாவம் மன்னிக்கப்படும். அது மட்டுமல்ல, உன் பாவத்தால் பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலன்றி, ஆண்டவனும் மன்னிக்க மாட்டான்’ என, பகர்ந்தவர். உண்ணுவதற்கு ஒன்றும் கிடைக்காத பாலைவனத்தில் அவதரித்திருந்தாலும், ஜீவகாருண்ய உள்ளங் கொண்டவராய் வாழ்ந்தார் நபிகள் நாயகம்.
‘பிறரை நேசித்த நபிகள் பிற மதங்களையும் நேசித்தார்’ என, நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நிகழ்வுற்ற, நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகளும், உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிக்க சோதனைகளும் படிப்போர்க்கு நன்னெறியைப் புகட்டுகின்றன. நிகழ்வுகளுக்கேற்ற குறட்பாக்களை ஆங்காங்கே தொடர்புபடுத்தி உள்ளார் நூலாசிரியர்.
புலவர் சு.மதியழகன்