நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. ‘பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமா போல, பகவதனுபவம் பண்ண நெருப்பிலே இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளும் உருமாய்ந்து போகும்’ என்ற ஈட்டின் விளக்கம் கூறுவதும் (பக்.39)
இறை அறிவு தலைதூக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று ‘செங்கழுநீர்வாய் நெகிழ, ஆம்பல் வாய் கூம்பின’ எனும் ஆண்டாள் திருப்பாவை அடிகளுக்கு விளக்கம் சொல்வதும் (பக்.45) வண்டுகள் தேன் குடிக்கும் போது விக்கினால் என்ன செய்யும் என்பதை விளக்கியும் (பக்.71) கல்வெட்டுகளில் திருமால் வழிபாடு பற்றிய செய்திகள் சில விளக்குவதும் (பக்.81)
சரணாகதி செய்வதற்கு நியதிகள் வேண்டாம் என்பதை பிள்ளைலோகாசாரியரின் ஸ்ரீ வசனபூஷணம் எனும் நூல் கொண்டு விளக்குவதும் (பக்.88) சரமசுலோகத்தை, ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு விளக்குவதும் (பக்.120) நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக்காட்டுகள். சிறிய நூலாக இருப்பினும், சிறப்பான நூல்.
க.ச