இந்த நூலாசிரியர், திருக்குறளுக்கு எளிய உரையை, புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இது ஒரு புதிய முயற்சி. ‘ஐந்தின் வகை தெரிவான்’ எனும் தொடருக்கு, ‘புலனைந்து, பொறியைந்து, பூதமைந்து, இவை தம்மின் தத்துவமெல்லாம் தெரிந்தே நிலையாக நின்றவரே நீத்தார் எனப்படுவார்’ என, விளக்கமளிப்பதும், ‘சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்’ என, துவங்கும் குறளுக்குப் பரிமேலழகர், தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையிலிருந்தும், திருக்களிற்றுப் படியாரிலிருந்தும் மேற்கோள் காட்டி கூறிய உரையை, ‘சீர்மிகு செல்வமிங்கு இறையொன்றே அதையுணர்ந்து அவன்பால் நின்றிருந்தால், பழவினைத் தோன்றாது பின் தொடர்ந்து வராது பிறப்பென்னும் பெருஞ்சுழல் அறுந்து அகன்றுவிடும்’ என, எளிமையாக்கி, இனிமையாக்கி தந்துள்ளார்.
‘தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு’ எனும் குறட்பாவிற்கு, சீர்மிகு சித்தாந்தக்கருத்துகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறி, ‘அமுத வல்லியே நின்றன் மென்தோளை அணைந்தேன், குமுதக் கண்மாலனின் வைகுந்த வாசத்தின் அணைப்பும் இதற்கிணையாமோ?’ என, இனிமை கவிதையாக ஆக்கி உள்ளார்.
புலவர் சு.மதியழகன்