எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில், குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ‘‘ஓம் என்ற வார்த்தையைப் பற்றி, நம் ஊரில் பல பேருக்கு தெரியாது. ஓம் என்று உச்சரிப்பதன் மூலமும், தியானம் செய்வதன் மூலமும், உடல் ரீதியாக, மனம் ரீதியாக, மூளை ரீதியாக சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வர முடியும்,’’ என்று சொல்கிறார் ஜனகன்.
இந்த நாவலில், வில்லன் கிடையாது. முக்கியப் பாத்திரங்களான சாமா, சாரங்கன் இருவருமே தியாகிகள். கதைக்களம், கும்பகோணமும், சான்பிரான்சிஸ்கோவும். அறுபது வயதுக்கு மேல் ஆகிவிட்ட கதாநாயகன், அமெரிக்காவுக்குப் பயணமாகி, அங்கே தனக்கு ஒரு பெண்ணைத் தேடி கல்யாணம் ஆகி, இந்தியா திரும்பும் கதையை லாகவகமாகச் சொல்லி செல்கிறார், ஜனகன்.
படிக்கத் தெவிட்டாத பக்கங்கள். அருமையான கள வர்ணனைகள். கண்ணியமான குடும்ப நாவல்.
எஸ்.குரு