இந்த நூலில், இந்திரா சவுந்தர்ராஜன், சித்தர்கள் தொடர்பான தகவல்களை, கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார்; அதிலும், அவரின் கைவண்ணம் அழகாகவே இருக்கிறது. ‘சக்தி விகடன்’ இதழில், தொடராக வந்த அவரது கட்டுரைகள், இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கின்றன. சித்தர்கள் மேற்கொண்ட வாழ்க்கை, அவர்கள் வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் என, மொத்தம், 39 கட்டுரைகளில், சர்வமும் சித்தமாக மிளிர்கின்றது. பட்டினத்தார், கருவூரார், பாம்பாட்டி, கொங்கணர், தேரையர், புலிப்பாணி, மச்சமுனி, ரோமரிஷி, பிண்ணாக்கீசர், பிராந்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, திருமூலர், பதஞ்சலி முனிவர் உள்ளிட்ட, பலசித்தர்கள் வாழ்வில் நடந்தவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானே, சித்தராக வந்து அருளிய திருவிளையாடல், சித்தர்கள் ரசவாதம் செய்தது, கூடு விட்டுக் கூடு பாய்ந்தது, நவபாஷாணத்தில் விக்கிரகம் செய்தது, ஆகாயத்தில் பறந்தது போன்ற அதிசயங்களை விவரித்து, நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். தமிழ் மண்ணில் வாழ்ந்து, அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் பற்றி அறிந்துகொள்ள, இந்நூலை வாசிக்கலாம்.
கலா தம்பி