தமிழை ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்கள் பலரையும் பற்றி எழுதத் துவங்கும் நூலாசிரியர், ஹார்டி (ஆர்டி) என்பவர் செய்த ஆய்வை குறித்து இந்நூலில் விரிவாக எழுதி உள்ளார். ஆர்டி ஜெர்மானியர். தமிழ் வழக்கறிஞராக திகழ்ந்தவர். சமயவியல் பேராசிரியர்.
கிருஷ்ண பக்தியை விரகபத்தி என்றும், கிருணவம் என்றும் குறிப்பிடுவது புதுமை. திருமாலை குறிக்கும் மாயோன், மாயவன் என்ற பெயர்கள் கருமை நிறத்தால் வந்த பெயர்கள் என்கிறார். மாயோன், சேயோன் பற்றி குறிப்பிடும் நூற்பா, தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதைக் கிழித்தெறியலாம் என்றும் குறிப்பிடுவது ஆய்வு செய்ய வேண்டிய கருத்து.
நப்பின்னை – பின்னை என்பவள் பின்னவள் (இளையவள்) என்றும், பின்னல் சடையாள் என்றும் பொருள் கொள்கிறார். நூலின் பின்பாதியில் குறிப்புகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த நூல், ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய ஒன்று.
பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்