அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது. இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது.
புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை பெருமையோடு குறிப்பிடுகிறது. சர் சி.வி. ராமன், ஜி.டி. நாயுடு, என, நம்மவர் சிலரின் சாதனைகளைச் சொல்கிறது. ஆனால், மேலதிகமாக, மேல்நாட்டவரின் வெற்றிக் கதைகள்தாம் நூல் முழுவதும் விரவி நிற்கின்றன. அறிவாற்றலில் சிறந்த இன்னும் பல இந்திய ஆளுமைகளைச் சொல்லியிருக்கலாம். நினைவாற்றலில், கோட்டாறு சதாவதானி செய்குதம்பி பாவலர், சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், பார்வையற்ற கோவில்பட்டி இராமையா பிள்ளை போன்ற அவதானிகளைச் சொல்லியிருக்கலாம். இளைய சமுதாயம் படித்துப் பயன் பெறத் தக்க நூல் இது..
விஜய திருவேங்கடம்