சென்னை பல்கலையில், தமிழ் இலக்கியத் துறையில், ஆய்வியல் நிறைஞர் பட்டப்பேற்றிற்காக, ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஆய்வேடு தான், இப்புத்தகம். கடந்த, 1938ம் ஆண்டு முதல், 1950ம் ஆண்டு வரையிலான, வானொலி வரலாற்றை, இப்புத்தகம் விளக்குகிறது; இதற்கு, அந்த கால கட்டங்களில் வெளிவந்த, ‘வானொலி’ இதழ்களை முதன்மை தரவுகளாக, ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார்.
இப்புத்தகம், 1938க்கு முன், பின், வானொலி வரலாறு; நிகழ்ச்சிகள் உருவாக்கம் – ஒலிபரப்பு; தமிழ் இலக்கிய ஆளுமைகள் மற்றும் வானொலி உருவாக்கம், விளைவுகள் என, நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நிகழ்ச்சிகளின் விவரத்தொகுப்பு, வானொலி இதழின் அட்டைப்படங்கள், உரைகள், கவிதைகள், விளம்பரங்கள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தில், மதராஸ் வானொலியில், தந்தி காரியாலயம் குறித்த அறிமுகம்:
டக் டக டக் டக டிக் டிகி டிக் டிகி டகட் கட் கட.... தபால் ஆபிசுக்கு போனால், இப்படி ஏதோ ஒரு சப்தம் கேட்கிறது; அவ்வளவு தான், நமக்கு தெரியும். ஆனால், தந்தி குமாஸ்தா இந்த சப்தத்தைக் கேட்டு என்னவெல்லாமோ எழுதிக் கொள்ளுவார். எழுதியதும், தந்தி சேவகன் மூலம், தந்திகள் பட்டுவாடா செய்யப்படும். ஒரு வீட்டில். ஒரே குதூகலம்; இன்னொரு வீட்டில், ஒரே அழுகை. இப்படி விதவிதமாக இருக்கும்.
சுபகாரியமாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும், தந்தி இலாகாவைப் போற்ற வேண்டியது தான். சென்னையில் மத்திய தந்தி இலாகா காரியாலயம் இருக்கிறது. இந்தக் காரியாலயத்தைப் பற்றிய சகல விவரங்களும் அங்கிருந்தே ஒலிபரப்பப்படும். காரியாலயத்தை நேரில் கண்ட அனுபவமே பெறுவீர்கள். (பக். 83) மதராஸ், மற்றும் திருச்சினாப்பள்ளி (திருச்சி) வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட, இசை நிகழ்ச்சிகள், பேச்சு, நாடகம், கவி அரங்கம், பேட்டி, விவாதங்கள் ஆகியவை குறித்தும், ஆசிரியர் விவரிக்கிறார்.
சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் நிலைய இயக்குனர், எம்.எஸ். கோபாலின் நேர்காணல் சிறப்பு. புத்தகம் வாசிக்கும், நாம் ‘அட’ என, நிச்சயம் ஆச்சரியப்படுவோம்.
கலா தம்பி