கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் நாயர் சமுதாயம் பற்றிய விரிவான ஆய்வு நூல் இது. நாட்டுப்புறவியல் சார்ந்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்களை சேகரிக்க, ஆசிரியர் செய்த பெரும் முயற்சி, புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் வெளிப்பட்டுள்ளது. ஒரு சமூகம் வளர்ந்து வரும்போது, அதன் உற்பத்தி உறவில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்ய, தேவையான தகவல்களை சேகரிக்கும் முயற்சி நடந்துள்ளது, இந்த புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளது.
பொதுவாக, தமிழகத்தில் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளில், அதன் பழமை, மேன்மை, அதிகாரம் என, தகவல்கள் அடுக்கப்பட்டிருக்கும். இந்த புத்தகம் அதுபோன்ற தகவல்களுடன் நிற்காமல், சமூகத்தின் மீது பல கேள்விகளை எழுப்பி விடையும் தேட முயல்கிறது. ஜாதி சார்ந்த மேன்மையை வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் சொன்னாலும், ஜாதிக்குள் உள்ள படிநிலையையும் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பிட்ட சமூகக் கூட்டம் வளர்ந்து வரும்போது, பரந்து விரிந்து, அது பிற சமூகங்களுடன் கொள்ளும் உறவு பற்றிய விவரங்களும் ஆராயப்பட்டுள்ளன. புத்தகத்தில், மொழி உச்சரிப்பு பற்றி தனியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நாயர்களின் மொழி அமைப்பு என்ற தலைப்பில், தனி இயலில் இது தொகுக்கப்பட்டுள்ளது. இது, மொழிக்கு வளமை சேர்க்கும் ஒரு துவக்கம்.தமிழகத்தில் ஜாதிக்கு ஒரு உச்சரிப்பு முறை உள்ளது. அதை ஏற்க மறுத்தாலும், அதுதான் உண்மை. இந்த புத்தகம், அதை விரிவாக ஆய்வு செய்து உள்ளது சிறப்பு மிக்கது.
நாயர் சமூகத்தவர், பாரம்பரியமாக பாடும் பாடல்கள், தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை, வாழ்வியலையும், வாழ்விடத்தின் சிறப்பையும் பிரதிபலிக்கின்றன. நாயர்கள் பின்பற்றும் சடங்கு முறைகள், புகைப்படங்களாகவும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு தகவல்கள், மிகவும் வெளிப்படையாக அமைந்துள்ளதற்கு இதுவே சான்று. ஒரு சமூகம் பின்பற்றும் பழக்க வழக்கங் கள், பண்பாட்டு நெறிகள் பற்றிய தகவல்களை, உள்ளீடாக ஆய்வு செய்து, வெளிப்படுத்தும் போது, மற்ற சமூகங்கள் தங்கள் பழக்க வழக்கங்களை, அத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ, உரசிப் பார்க்கவோ முடியும். இது நல்லிணக்கத்திற்கு உரிய தகவல்களின் அடிப்படையாக அமையும். அந்த வகையில் இந்த நூல், தேர்ந்த உழைப்பின் மூலம் வெளிப்படையாக தகவல்களை சொல்கிறது.
அமுதன்