ஆறுகாட்டுத்துறை எனும் கடற்கரை கிராமத்தை மையமாகக் கொண்டு நடக்கும் நிகழ்வுகளை விளக்கும் நாவல் இது. கோடியக்கரைக்கு அருகில் உள்ள இந்த ஊரில், மீன் பிடிக்கும் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்க்கையை, உள்ளது உள்ளபடி காட்டுவதில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
சமுத்திரவல்லி எனும் பெண், சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டு ஆண்களை திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதை விளக்கும் இந்த நாவல், பெண்மையின் வெற்றிக்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஆறுகாட்டுத் துறையில் நடைபெறும் திருவிழாவும், பழக்க வழக்கங்களும், கட்டுமரமும், விசைப்படகும், நாவல் போக்கிற்கு ஏற்ப அழகாக காட்டப்பட்டு உள்ளன. நாவலின் இறுதியில், நடுக்கடலில் நடக்கும் கொலைக்காட்சி, நெஞ்சை துடிக்க வைத்தாலும், இறுதியில் அது நிறைவைத்தான் தருகிறது.
‘நான், ரெண்டு பேருக்கும் முந்தான விரிச்சவ தான். ரெண்டு பேருக்கும் புள்ளப் பெத்துக் குடுத்தவ தான். இல்லங்கல. ஆனா, நீ சொல்லுறமேரி, நான் துரோகம் செய்யல. நான் உத்தமிதாங்கறது உண்மைன்னா, நான் கரையேறுவேன். இந்தக் கடல்தாயி, என்ன கரகொண்டு சேப்பா. யாம் பொண்ணு கண்ணு முழிச்சி எழும்பறப்ப, அவ மின்னாடி நிப்பன்!’
இது நாவலில் வரும் ஒரு வசனம். மக்கள் தமிழுக்கு கிடைத்த மாபெரும் படைப்பு, இந்த ஆறுகாட்டுத் துறை நாவல்.
முகிலை இராச பாண்டியன்