‘பெரியார் பெருவாழ்வும் புதுச்சேரியும்’ என, துவங்கி, ‘சின்னச் சின்னச் செய்திகள்’ முடிய, 34 கட்டுரைகள் மூலம், புதுச்சேரியின் வரலாற்றோடு தொடர்புடைய பல பெருமக்களின் சுவடுகள் இதில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அன்னை தெரசா, நான்கு முறை புதுச்சேரிக்கு வந்துள்ளார் (பக்.50); இந்திய விடுதலைக்கு போராடியவர்களுக்கு, புதுச்சேரி புகலிடமாக அமைந்தது; அரவிந்தர், சீனிவாசாச்சாரியார், பாரதியார், நீலகண்ட சாஸ்திரி, வ.வே.சு.அய்யர் என, வ.உ.சிதம்பரனார் வரையிலான தொடர்பும் விவரிக்கப்பட்டுள்ளது.
‘புதுவை வேதபுரீஸ்வரர் மீது இலக்கணப்பிழை இல்லாமல் வெண்பாக்களால் வேதபுரீஸ்வரர் பதிகம் பாடினார் (பக். 142) நாராயணகுரு; அரவிந்தர் ஆசிரமத்தில், 22 ஆண்டுகள் வாழ்ந்து, வடலூர் வள்ளலார் மீது பற்று ஏற்பட்டு, ‘மகாத்மா வள்ளலார்’ என்ற புத்தகத்தை (பக்.155) எழுதினார் சுத்தானந்த பாரதியார்; உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியத்தை 1102 பக்கங்களில் உருவாக்கிய மலேசிய தமிழ்க்குயில் கலியபெருமாள் (பக்.118); செஞ்சி முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் கடற்கரையில் எட்டு கல்தூண்கள் நிறுவப்பட்டன (பக்.209)’ இப்படி பல தகவல்கள், இதில் அடக்கம்.
பின்னலூரான்