தமிழ் பத்திரிகை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் புத்தகங்கள், தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. அந்த புத்தகங்களும், 20 ஆண்டுகளுக்கு முன் வந்தவை. அந்த குறையை போக்கும் வகையில் வெளிவந்துள்ளது, இந்த நூல். கடந்த, 25 ஆண்டுகளாக, பல்வேறு தமிழ் வார இதழ்களில், வெவ்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்த, கருணாகரன் தமது அனுபவத்தை, 18 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.
ஒரு நிருபரின் பார்வையிலிருந்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதால், வார இதழ்களின் உள்ளடக்கமும், மொழிநடையும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ‘இதழியல் என்பது ஒரு மனோபாவம்’ என்ற கட்டுரையில், பயிற்சி பத்திரிகையாளர் கருணாகரன் வழங்கும், 11 கட்டளைகள், இளைய தலைமுறை பத்திரிகையாளர் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
நிருபர் ஒரு செய்தியை எழுதும் முன்பு, அதனால், சமூகத்தில் ஏற்படும் பின்விளைவுகளையும் மனதில் வைத்தே எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நடந்த குளறுபடிகளை எழுதி, அதனால், மாணவர்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்பட்டதையும் பதிவு செய்யும் நூலாசிரியர், வேலை வாய்ப்புக்காக மட்டுமே கட்டமைக்கப்பட்ட கல்விமுறையை கேள்விக்கு உள்ளாக்காமல், மாணவர்களை
மட்டுமே குறை சொல்லி எழுதியதை வருத்தப்பட்ட இடம், அற்புதம்.
அதேபோல், விருத்தாசலம் மாரியோடை பகுதியில் விபசாரம் தொடர்பான கைகலப்பு குறித்து, இவர் எழுதிய கட்டுரைக்காக, ‘உங்க வலையில திமிங்கலங்களை பிடிக்க முடியுதா பாருங்க. சென்னாங்குன்னிகளை காய வைக்காதீங்க’ என்ற போலீசாரின் வார்த்தைகள், ஒவ்வொரு பத்திரிகையாளனும் மனதில் பதிக்க வேண்டிய ஒன்று.
எதை எழுத வேண்டும் என்பதை விடவும், எதை எழுதக் கூடாது என்பதற்கு, அவர் தரும் உதாரணங்கள், நல்ல வழிகாட்டுதல்.
கமல் குறித்த கட்டுரையில், கமலின் மேலாளரை நூலாசிரியர், எதிர்கொண்ட விதம், நல்ல பத்திரிகையாளனுக்கு எடுத்துக்காட்டு.
அதேநேரம், மற்றொரு சம்பவம், ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க கூடாது என்பதையும் விவரிக்கிறது. உடனே, அச்சில் ஏற வேண்டிய செய்திக்காக, அரசியல் பிரமுகரை பேட்டி கண்ட போது, அவர் சன்மானம் வழங்கினார் என்ற, ஒரே காரணத்துக்காக, அவருடைய பேட்டியை எழுத முடியாது என்று நூலாசிரியர் மறுக்க, ‘நீங்கள் செய்தி நிறுவனத்தின் பிரதிநிதி; நீங்கள் மட்டுமே செய்தி நிறுவனம் அல்ல; கடமை மறந்த கொள்கையால் என்ன புண்ணியம் என்ற வழிகாட்டுதல், நிருபர்கள் அனைவரும் கவனிக்கத்தக்கவை.
இருப்பினும், ஒரே ஒரு கட்டுரையைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்டுரைகளையும் உடன்பாட்டு முறையிலேயே எழுதியுள்ளார். இவை, ஊடக உலகின் ஒரு தரப்பை மட்டுமே பிரதிபலிப்பதாக உள்ளது. எளிமையான மொழி நடை. சுவாரசியமான தகவல்கள் இரண்டும் ஒரு சேர, பின்னிப் பிணைந்திருப்பதால், ஒரே மூச்சில் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. இதழியல் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
அ.ப.இராசா